Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மும்பையில் நடந்த விழாவில் மூன்று போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

மும்பை: ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்‌ஷீர் ஆகிய 3 கடற்படை போர்க் கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு நேற்று அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது: சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்தியாவில் கடற்படைக்கு புதிய பலத்தையும், தொலைநோக்குப் பார்வையையும் அளித்தார். அவரது மண்ணில் 21ம் நூற்றாண்டில் இந்தியக் கடற்படைக்கு அதிகாரம் அளிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பேரழிவைத் தரும் கப்பல், போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை ஒன்றாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த 3 கப்பல்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது பெருமைக்குரியதாகும்.

இந்தியா உலகின் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக உருவெடுத்து வருகிறது. சோழ வம்சத்தின் கடல்சார் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அர்ப்பணிக்கப்பட்ட ஐஎன்எஸ் நீலகிரி, குஜராத்தின் துறைமுகங்கள் இந்தியாவை மேற்கு ஆசியாவுடன் இணைத்ததை நினைவூட்டும் சூரத் போர்க்கப்பல் உள்ளிட்ட புதிய கப்பல்கள் தொடங்கி வைக்கப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வாரி என்ற முதல் நீர்மூழ்கிக் கப்பல் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, பி75 வகைப்பாட்டில் ஆறாவது வக்‌ஷீர் நீர்மூழ்கிக் கப்பல் இயக்கப்பட்டது. இந்த புதிய கப்பல்கள், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்தும். உலகளவில், குறிப்பாக தென்பகுதியில் நம்பகமான மற்றும் பொறுப்பான நட்பு நாடாக இந்தியா தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஆயுதப் படைகள் தற்சார்பு நிலையை ஏற்றுள்ளன. இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி ரூ.1.25 லட்சம் கோடியை கடந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். தற்போது, நாட்டில் சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள 60 பெரிய கப்பல்கள் கட்டுமானத்தில் உள்ளன. இன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ள புதிய போர்க்கப்பல்கள் நாட்டின் வலிமையை அதிகரிக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், பாதுகாப்பு இணையமைச்சர் சஞ்சய் சேத், மகாராஷ்டிர துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* ஐஎன்எஸ் சூரத், இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்ட போர்க்கப்பல்.

* ஐஎன்என் நீலகிரி கப்பலுக்கான 75 சதவீத உபகரணங்கள், சிறு, குறு நிறுவனங்கள் உட்பட இந்தியாவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்டவை.