Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

75 வயது பூர்த்தியாவதையடுத்து பதவி விலக போர்க்கொடி மோடி-ஆர்எஸ்எஸ் தலைவர் மோதல்: ‘ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்’ என மறைமுகமாக விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி: 75 வயது பூர்த்தியாவதையடுத்து பதவி விலக போர்க்கொடி தூக்கியுள்ளதால், மோடிக்கும், ஆர்எஸ்எஸ் தலைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது என்றும் ‘ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்’ எனவும் மறைமுகமாக காங்கிரஸ் மூத்த ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி, கடந்த 2 முதல் 9ம் தேதி வரை தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற ஐந்து நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘அடிக்கடி வெளிநாடு பறக்கும் சூப்பர் பிரீமியம் பிரதமரை இந்தியா வரவேற்கிறது. அவர் இன்னும் மூன்று வாரங்களுக்கு இந்தியாவில் தங்கியிருந்து விட்டு, மீண்டும் வெளிநாடுகளுக்குப் பறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவரது பதிவில், ‘பிரதமர் மோடி மணிப்பூரில் நடக்கும் வன்முறையை நேரில் சென்று பார்வையிட வேண்டும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் வதோதரா பாலம் இடிந்து விழுந்தது போன்ற உள்நாட்டுப் பிரச்னைகளில் அவர் கவனம் செலுத்த வேண்டும். வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் பிரதமர் மோடியை ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ‘75 வயதை எட்டியதும், பொறுப்புகளில் இருந்து விலகி அடுத்த தலைமுறைக்கு வழிவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். ‘இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி 75 வயதை எட்டவிருக்கும் நிலையில், மோகன் பகவத்தின் இந்த கருத்து மோடிக்கான மறைமுக செய்தி’ என்று ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ேமலும் அவர் வெளியிட்ட பதிவில், ‘பல விருதுகளை பெற்ற பிரதமர் மோடி பாவம்; அவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியதும், அவருக்கு செப்டம்பர் 17ல் 75 வயதாகிறது என்பதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் நினைவூட்டியுள்ளார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கும் செப்டம்பர் 11ல் 75 வயதாகிறது என்பதை பிரதமர் மோடி அவருக்கு நினைவூட்டலாம். ஒரே கல்லில், இரண்டு மாங்காய்’ என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். 75 வயது பூர்த்தியாவதையடுத்து பதவி விலக போர்க்கொடி தூக்கியுள்ளதால், மோடிக்கும், ஆர்எஸ்எஸ் தலைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது என்றும் ‘ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்’ எனவும் மறைமுகமாக காங்கிரஸ் மூத்த ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள இந்த கருத்து, அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.