Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எம்எல்ஏ அலுவலகத்தை பார் ஆக மாற்றி வைத்திருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நுண்ணறிவு பிரிவு போலீஸ் தகவல் கொடுத்தும் மாவோயிஸ்ட்டை கோட்டை விட்ட மஞ்சள் மாநகர கியூ பிரிவு போலீசாருக்கு பெரிய குடைச்சல் ஏற்பட்டிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கேரளாவில் இருந்து மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ரெண்டு பேர் மஞ்சள் நகருக்கு ரயிலில் வந்து கொண்டிருப்பதாக அம்மாநில நுண்ணறிவு பிரிவு போலீசார் கடந்த வாரம் மஞ்சள் மாநகர போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்காங்க... உடனே மஞ்சள் மாவட்ட கியூ பிரிவு போலீசார் உஷார் செய்யப்பட்டிருக்காங்க..

மஞ்சள் மாநகர ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அந்த ரெண்டு பேரையும் ரகசியமாக பின்தொடர்ந்து கண்காணித்தாங்களாம்.. மஞ்சள் நகரில் பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் இருவரும் நடந்தே போயிருக்காங்க.. கையில் பெரிய லக்கேஜ் பேக் ஒன்றையும் கொண்டு வந்தாங்களாம்.. இவர்கள் இருவரும், ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்ததோடு, அதன்பிறகு ரயில் மூலம் தென் மாவட்டத்திற்கு புறப்பட்டு போயிருக்காங்க..

மஞ்சள் நகருக்கு வந்த ரெண்டு பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர்களாம்.. இவர்கள் எதற்காக மஞ்சள் நகருக்கு வந்தாங்க.., யார் யாரை சந்தித்தாங்க.. இவர்களின் திட்டம் என்ன.. இவர்களது வருகை போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் செயலா என எதுவுமே தெரியவில்லையாம்.. இவர்களை கைது செய்யாமல் கோட்டை விட்டது ஏன் என்கிற கேள்வி மேலிடத்தில் இருந்து வந்துள்ளதாம்..

இது, மஞ்சள் மாநகர கியூ பிரிவு போலீசாருக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியிருக்கு.. இந்த விவகாரத்தில், யார் யார் தலை உருளப்போகிறதோ என தெரியவில்லை...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘போர்க்கொடி தூக்கும் தனது ஆதரவாளர்களை சமாளிக்க ஆலோசனை கூட்டம் நடத்தப் போறாராமே வைத்தியானவர் தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தேனிக்காரர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகியான வைத்தியானவர் விரைவில் நெற்களஞ்சியம் மாவட்டத்திற்கு வருகை தர இருக்கிறாராம்..

அப்போது, அவர் தனது ஆதரவாளர்களை அழைத்து ரகசிய ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளாராம்.. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்துக்கிட்டு வருகிறதாம்.. வைத்தியானவர் நடத்த உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், அவருடைய ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்க முடிவு செய்து இருக்காங்களாம்.. இதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் வைத்தியானவர் யோசனை செய்கிறாராம்.. பொறுத்திருங்கள் நல்லது நடக்கும் என்று சொல்லி, தனது ஆதரவாளர்களை சமாளித்து வந்தாராம்..

ஆனால், அவர் சொன்னது போல், எதுவும் நடக்கவில்லையாம்.. இனியும் பொறுத்திருக்க முடியாதுன்னு அவர்கள் புலம்பி தவித்து வருகிறார்களாம்.. இதனாலேயே தனது ஆதரவாளர்களை சரிகட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்த வைத்தியானவர் முடிவு செய்திருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வாகன ஓட்டிகளிடம் கைநீட்டிய வீடியோ வெளியானதால் சிக்கிய காக்கிகள் பயத்துலேயும், கடமையை செய்றவங்க கெத்தா காலர தூக்கிவிடுவதும் எங்கயாம்...’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டத்துல பள்ளி கொண்ட ஏரியாவுல டோல் கேட் இருக்குது.. இந்த டோல்கேட் எல்லாத்துக்கும் காஸ்லியாம்.. இந்த வழியாகத்தான் ரேஷன் அரிசி, தடை செய்யப்பட்ட பொருட்கள்னு எல்லாத்தையும் புடிக்க காக்கிகள் சோதனை நடத்துவாங்க.. அதோடு விதிமீறல் வாகன ஓட்டிகளும் கண்காணிக்கப்படுவாங்க.. இங்க 2 நாளைக்கு முன்னாடி பள்ளி கொண்ட ஏரியா காக்கியும், ஊர் படை காக்கியும் சேர்ந்து தணிக்கையில ஈடுபட்டாங்களாம்.. அப்போ, அவ்வழியாக வர்ற வாகன ஓட்டிகள்கிட்ட கை நீட்டியிருக்குறாங்க..

இந்த வீடியோ சோஷியல் மீடியாக்கள்ல வைரலாகிட்டிருக்குது.. இதை பார்த்து அதிர்ச்சியான மாவட்ட உயர்காக்கி, விசாரணை நடத்தி, சஸ்பெண்ட்டும் செஞ்சிருக்குறாரு.. இந்த சஸ்பெண்ட் மேட்டரால, ரோட்டுல சோதனை போடுற காக்கிகள்ல, தப்பு செய்ற காக்கிகள் மட்டும் பயத்துல இருக்காங்க.. நேர்மையான காக்கிகள் காலரை தூக்கிவிட்டு கடமைய செய்றோம்னு அந்த துறையில இருந்தே சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆணையரை காணவில்லை என போஸ்டர் அடித்த எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் போஸ்டர் அடிக்க தயாராகிவிட்டதா பேசிக்கிறாங்களே...’’ என கடைசி கேள்வியை கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் வனம் என்ற சட்டமன்ற தொகுதியில் இலைக்கட்சியை சேர்ந்த வில் அம்பு விடுவதற்கு பெயர் போனவர்தான் எம்எல்ஏவாக இருந்து வருகிறாராம்.. மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இவரை சமீபகாலமாக தொகுதி பக்கமே பார்க்க முடியவில்லையென மக்கள் புலம்பி வருகிறார்களாம்..

தங்கள் ஊருக்குதான் அவர் வருவதில்லை. நேரில் சந்தித்து மனு கொடுத்துவிட்டு வரலாம்னு நினைத்து எம்எல்ஏவுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்துக்கு சென்றால் அங்கு மதுபாட்டில்களுடன் ஒருகூட்டம் எப்போதும் அமர்ந்து கொண்டிருக்கிறதாம்.. எம்எல்ஏ அலுவலகத்தை பார் ஆக சிலர் மாற்றி வருவதால் அங்கு செல்லவே அச்சமாக இருப்பதாக பெண்கள் புலம்புகிறார்களாம்..

சில நாட்களுக்கு முன்பு நகராட்சி ஆணையரை காணவில்லைனு எம்எல்ஏ பரபரப்பாக போஸ்டர் அச்சடித்து ஒட்டியிருந்தாராம்.. கடைசியில் தொகுதி மக்களே மனுக்களுடன் எம்எல்ஏவை பார்க்க முடியாமல் தவித்து வரும் நிலையில், ஆணையருக்கு அவர் அச்சடித்த மாதிரியே எம்எல்ஏ பெயரை போட்டு போஸ்டர் அடிக்க பொதுமக்களும் தயாராகி வருவதாக ஊர் முழுக்க பேச்சு ஓடுகிறது..’’ என முடித்தார் விக்கியானந்தா.