Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிறுபான்மை கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமன விவகாரம் சென்னை பல்கலைக்கழகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் லயோலா கல்லூரியின் செயலாளர் தாமஸ் அலெக்ஸாண்டர் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கல்லூரியில் அரசு உதவி பெறும் பிரிவில் 3698 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். இதற்காக 149 பேராசிரியர்களும், 59 ஆசிரியரல்லா ஊழியர்களும் தேவை. ஆனால், தற்போது 114 ஆசிரியர்களும், 16 ஊழியர்களும் மட்டுமே உள்ளனர். அரசு உதவி பெறாத சுய நிதி பிரிவில் 5467 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இதற்காக 283 பேராசிரியர்களும், 170 ஆசிரியரல்லாத ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள்.

இதையடுத்து, அரசு உதவி பெறும் பிரிவில் 5 பேரையும், சுயநிதி பிரிவில் 31 தகுதியான ஆசிரியர்களையும் நியமனம் செய்து சென்னை பல்கலைக்கழத்தின் அங்கீகாரத்திற்காக கடந்த 2022 அனுப்பி வைத்தோம். ஆனால், பல்கலைக்கழகத்தின் தேர்வு குழுவின் ஒப்புதலை பெறவில்லை என்று கூறி உதவி பேராசிரியர்கள் பட்டியல் திரும்ப அனுப்பப்பட்டது. இந்த பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகள் சிறுபான்மை கல்லூரிகளுக்கு பொருந்தாது என்று கடந்த 2011 ஜனவரி 5ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, எங்கள் கல்லூரி அனுப்பிய உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு சென்னை பல்கலைக்கழகம் அங்கீகாரம் தர வேண்டும் எனக்கோரி கடந்த 2023ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இதேபோல் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, கிறிஸ்டியன் கல்லூரி, உமன் கிறிஸ்டியன் கல்லூரி ஆகிய சிறுபான்மை கல்லூரிகளும் வழக்கு தொடர்ந்தன. வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு தேர்வு குழு அமைக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகள் சிறுபான்மை கல்லூரிகளுக்கு பொருந்தாது என்று உத்தரவிட்டது.

ஆனால், இதுவரை எங்கள் கல்லூரியின் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான அங்கீகாரம் குறித்து எந்த நடவடிக்கையையும் சென்னை பல்கலைக்கழகம் எடுக்கவில்லை. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சென்னை பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி கல்வி இயக்குநரகம், உயர் கல்வி துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. கல்லூரிகள் சார்பில் வழக்கறிஞர் அபிஷா ஐசக் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் உயர் கல்வி துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குநர், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பதில் தர உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.