மாதவரம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபால் (32). இவருக்கு திருமணமாகி, மனைவி உள்ளார். இந்த நிலையில் ஜெயபாலுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சிகிச்சை பெற்றுவந்தார். அவரும், அவரது மனைவியும் சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள தெரிந்தவர் வீட்டில் தங்கியிருந்து மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2019 ஜூன் 3ம் தேதி அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்த 14 வயது சிறுமியை ஜெயபால் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் ஜெயபால் தனது இரண்டாவது மனைவி வசிக்கும் மாமல்லபுரத்திற்கு சிறுமியை கூட்டி சென்று அங்கும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து பல முறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சிறுமியை வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளார். இந்த நிலையில், சிறுமி வீட்டை விட்டு சென்றுள்ளார். சிறுமியை அவரது தாயும் உறவினர்களும் தேடியுள்ளனர். 4 நாட்கள் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் தாய் புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, சிறுமியை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமி பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ஜெயபாலை கைது செய்த புளியந்தோப்பு மகளிர் போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் ஜெயபாலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை சிறுமிக்கு இழப்பீடு தரவேண்டும். மேலும், ஏற்கனவே சிறுமிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த தொகையை சேர்க்காமல் ரூ.10 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.