Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்னை சாகுபடி விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முயற்சியில் கையேடு உருவாக்கம்: வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டார்

சென்னை: தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முயற்சியில் உருவான கையேட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், விவசாயப் பெருங் குடும்பத்தை சார்ந்தவர் என்பதன் அடிப்படையிலும், தான் பெற்றுள்ள நீண்ட அனுபவத்தின் பயனாக, தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறுகின்ற வகையில், தன் முயற்சியில் உருவாக்கியுள்ள “தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான கையேடு” வெளியிடும் விழா நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.

விழாவில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கையேட்டை வெளியிட குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இல.சுப்பிரமணியன், எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையர் வெ.ஷோபனா, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கையேட்டை வெளியிட்டு பேசுகையில், ‘‘கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் அலுவலர்கள் ஆகியோரின் உதவியோடு பல்வேறு மாவட்டகளில் கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடி, தென்னை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயப் பெருமக்களும், வேளாண் துறையும் பயன்பெறுகின்ற வகையில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இந்த கையேட்டை உருவாக்கியுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது’’ என்றார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘தென்னை நார் பொருட்களின் தரத்தை பரிசோதித்து உறுதி செய்ய ரூ. 4 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. தென்னை விவசாயிகள் பயன்பெறுகின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், ‘‘எளிதாக புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இக் கையேடு விவசாயிகளுக்கு பெரிதும் பயன் தரும்” என்றார்.