Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசின் பல்வேறு துறைகள் பயன்படுத்தும் வகையில் செந்தர விலைப்பட்டியல் அமைச்சர் வெளியிட்டார்

சென்னை : தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் பயன்படுத்தும் வகையில், 2025-26ம் ஆண்டிற்கான செந்தர விலைப் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசால் முதன்மை தலைமைப்பொறியாளர்கள், பொறியியல் இயக்குநர்களை கொண்டு செந்தர விலைப்பட்டியல் குழு அமைக்க 14.3.2024 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த குழு உறுப்பினர்கள் பல்வேறு மட்டத்தில் கட்டுமான பொருட்கள் மற்றும் இதர இனங்களின் விலைகள் குறித்து பல்வேறு தரவுகளின் அடிப்படையில் விவாதித்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 3 தொகுதிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல் தொகுதி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் நீர்வளத்துறை, 2ம் தொகுதி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை, 3ம் தொகுதி வனத்துறை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம். இந்த செந்தர விலைப் பட்டியலை அரசுத் துறைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் பயன்படுத்தும் வகையில், தமிழ்நாடு பொதுப்பணித்துறையால் தயாரிக்கப்பட்ட 2025-26ம் ஆண்டிற்கான செந்தர விலைப் பட்டியலை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று வெளியிட்டார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, நீர்வளத்துறை அரசுச் செயலாளர் ஜெயகாந்தன், நிதித்துறை இணைச் செயலாளர் பிரதீக் தயாள், நிதித்துறை துணைச் செயலாளர் ரிஷப், பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மணிவண்ணன், நெடுஞ்சாலைத்துறை தலைமை இயக்குநர் செல்வதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.