Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிமுக-பாஜ கூட்டணி அமலாக்கத்துறையை ஏவி விட்டு நடத்தும் அவதூறு பிரசாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்: அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனம் மற்றும் ஒப்பந்தம் விட்டது தொடர்பாக ரூ.1020 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாகவும், எனவே அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபிக்கு அமலாக்கத்துறை சார்பில் 288 பக்க ஆவணங்களுடன் 2வது முறையாக கடிதம் அனுப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகளின் வரிசையில் அமலாக்கத்துறையையும் சேர்ந்து கொண்டு-அதை ஒன்றிய பாஜ அரசின் ஏவல் துறையாக்கி- நாளொரு புகாரும், பொழுதொரு பிரசாரமுமாக என்னை குறி வைத்து தொடர்ந்து அவதூறில் ஈடுபட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

கடந்த ஐந்து வருடங்களில் எனது துறையின் கீழ் 24 ஆயிரத்து 752 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 1 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் 77 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என இதுவரை 1762 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சமீபத்தில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட கோவை செம்மொழிப் பூங்கா.

சென்னை என்றால் தொல்காப்பிய பூங்கா, கோவை என்றால் செம்மொழிப் பூங்கா என்பதோடு மக்கள் கண்டுகளிக்க-தங்களது பொழுது போக்கிற்காக ஏற்ற பூங்காக்களை திராவிட மாடல் அரசு போல் தமிழ்நாட்டில் அதிமுக அரசும் செய்யவில்லை. மற்ற மாநிலங்களில் உள்ள பாஜ ஆளும் அரசுகளும் செய்யவில்லை. அதனால் தான் எனது துறையின் திராவிட மாடல் வளர்ச்சி எதிர்கட்சிகளின் கண்ணை உறுத்துவதை விட அமலாக்கத்துறையின் கண்களையும் உறுத்துகிறது.

பேருந்து நிலையங்கள் என்று எடுத்துக் கொண்டால் இதுவரை 158 பேருந்து நிலையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாடப் பயணத்திற்கு மட்டுமல்ல-அத்தியாவசியப் போக்குவரத்து தேவைக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் எனது துறை வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளைச் செய்திருக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஐந்தாண்டுகளில் மாற்றும் அளவிற்கு வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறோம்.

சென்னையில் அதிமுக ஆட்சியில் சாலைகளும்-சப்வேக்களும் ஒரு மழைக்கே வெள்ளக்காடாக காட்சியளித்ததை அனைவரும் அறிவர். ஆனால் இன்று சென்னையில் உள்ள சப்வேக்களில் நீர் தேங்காத நிலையை உருவாக்கியிருக்கிறோம். செம்பரம்பாக்கம் என்றாலே அதிமுக ஆட்சிதான் நினைவுக்கு வரும். அந்த நிலையை மாற்றி எத்தகையை மழை வெள்ளத்திலும்- எத்தனை முறை செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறந்தாலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து-இன்னலின்றி மழை வெள்ள துயரங்களில் இருந்து சென்னை மக்களை காப்பாற்றியிருக்கிறோம்.

அந்த வகையில், சென்னை மாநகாராட்சியில் மட்டும் 1519 கிலோ மீட்டர் தொலைவிற்கு மழைநீர் கால்வாய் பணிகளை செய்துள்ள அரசு இந்த திராவிட மாடல் அரசு மட்டும்தான். இந்த சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத சட்டமன்றத் தேர்தலுக்கு புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக-பாஜ. கூட்டணி கட்சியினரின் தூக்கத்தை இந்த அரசின் சாதனைகள் கலைத்து விட்டன.

குறிப்பாக பாஜவினரை இந்த சாதனைகள் ரொம்பவே மிரட்டுகிறது. ஒன்றிய நிதியை முடக்குகிறோம். ஆளுநரை வைத்து முட்டுக்கட்டை போடுகிறோம். ஏஜென்சிகளை விட்டு பிரசாரம் செய்கிறோம். ஆனாலும் சாதனைகள் செய்கிறார்களே என்ற எரிச்சல். எனவே எத தின்னால் பித்தம் தெளியும் என திண்டாடுகிறார்கள். ஆகவே அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிகளை ஏவி விடுகிறார்கள். ஒன்றிய பாஜ அரசு செய்ய வேண்டிய அரசியல் பிரசாரத்தை அமலாக்கத்துறையையே வைத்து செய்கிறார்கள். தன்னாட்சி மிக்க அமைப்பு என உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறை இன்று பாஜவின் துணை அமைப்பாக்கப்பட்டிருக்கிறது.

என் சகோதரர் மீது 2013ல் வாங்கிய கடனை வைத்து போடப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் “எந்த குற்றமும் நடக்கவில்லை” என ரத்து செய்து விட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ஏற்கனவே உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சும் ரத்து செய்து விட்டது. ஆனாலும் அமலாக்கத்துறையை மீண்டும் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடச் சொல்லி ஒன்றிய பாஜ அரசு நிர்பந்திக்கிறது என்றால்-அவர்களுக்கு பயம் நானல்ல! இந்த துறை செய்துள்ள சாதனைகள்.

எனது துறைக்குள் எங்கு நுழைந்து பார்த்தாலும்-எங்கும் “சாதனை- சாதனை- சாதனை” என்றுதான் எதிரொலிக்கும். ஆனால் அதுவே ஒன்றிய பாஜ அரசு தூண்டிவிடும் அமலாக்கத்துறையின் கண்களுக்கு ஆதாரமற்ற புகார்களாகத் தெரிகிறது. அப்பட்டமான அரசியல் செய்ய தூண்டிவிடப்படுகிறது. மக்கள் போற்றும் எனது துறையின் சாதனைகளைப் பார்த்து வெதும்புபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது.

ஆனால் ஒன்று மட்டும் நான் தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனது நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்குதல் நிர்வாகத்துறையைப் பொறுத்தமட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்குதல், மழை நீர் வடிகால் பணிகளை நிறைவேற்றுதல், தலை சிறந்த பூங்காக்களை அமைத்தல் ஆகியவையே முதன்மையான பணிகள். முழுமையான சாதனைகள். மற்றபடி என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் பணியாற்ற வந்துள்ள நாங்கள் ஒன்றிய பா.ஜ. அரசின் தூண்டுதலில் அரசியல் பிரசாரத்தில் ஈடுபடும் அமலாக்கத்துறைக்கோ- அல்லது “அதிமுக- பா.ஜ.” கூட்டணியினர் “பொய்யையும், புரட்டையும்” மட்டுமே மூலதனமாக வைத்து ஈடுபடும் அவதூறுப் பிரசாரத்திற்கோ அஞ்சமாட்டோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.