Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Wednesday, August 13 2025 Epaper LogoEpaper Facebook
Wednesday, August 13, 2025
search-icon-img
Advertisement

நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளின் முன்னேற்றம் குறித்து, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், நெடுஞ்சாலைத்துறை அலகுகளின் மூலம் சுமார் ரூ.16,202 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் 74 சாலை பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பணிகளின்போது ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும், இன்று (19.11.2024) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

சாலைகளின் இரண்டு புறமும் வடிகால் வசதி செய்யப்பட வேண்டும் என்றும், கண்காணிப்புப் பொறியாளர்கள் அனைவரும் சாலைப் பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், சாலைப் பணிகளில் குறைபாடு இருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி பொறியாளர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.

நிலஎடுப்பு பணிகளில் காலதாமதம் ஏற்படும்போது, கண்காணிப்புப் பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர்களின் கவனத்திற்கும் கொண்டுச் செல்ல வேண்டும் என்றும்,2021-2022 ஆம் ஆண்டில், முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சில சாலைப் பணிகள் இதுவரை முடிக்கப்படவில்லை என்பதை குறிப்பிட்டு, விரைவில் இப்பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அமைச்சர் அவர்களின் தொடக்கவுரையை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று ஒவ்வொரு சாலைப் பணியின் முன்னேற்றம் குறித்தும், பணியின்போது ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு பொறியாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார். ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை விரைவாக முடிக்காமலும், சாலைகள் தரமாக இல்லையென்றாலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளபட வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

நெடுஞ்சாலைத்துறையிலுள்ள ஆய்வு மாளிகைகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். தார் சாலைகள் அமைக்கப்படும்போது, அதன் கனம் (Thickness) சரியான அளவில் இருக்கிறதா? என்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். நிலுவையிலுள்ள பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் சில சாலைப் பணிகளில் இன்னும் 40% சதவீதம் வரை முடிக்கப்படாமல் உள்ளது என்பதை குறிப்பிட்ட அமைச்சர் இப்பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், CRIDP திட்டத்தின்கீழ் மேற்கொள்ளபட வேண்டிய பணிகளில் நிலுவையிலுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பொறியாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார். டிசம்பர் 2024க்குள் நிலுவையிலுள்ள அனைத்துப் பணிகளையும் முடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு, திட்டங்கள் அலகு, தேசிய நெடுஞ்சாலை அலகு, நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகு, பெருநகர அலகு, சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்ட அலகு, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-II அலகு மற்றும் தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் ஆகிய அனைத்து அலகுகளில் நிலுவைப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் மருத்துவர் ஆர்.செல்வராஜ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-II, திட்ட இயக்குநர் எஸ்.ஏ.இராமன், நெடுஞ்சாலைத்துறையின் முதன்மை இயக்குநர் ஆர்.செல்வதுரை அவர்கள், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் தலைமைப் பொறியாளர், கே.ஜி.சத்தியபிரகாஷ், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் எம். சரவணன், நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகின் தலைமைப் பொறியாளர் ஜெ.தேவராஜ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-II, தலைமை பொறியாளர், கே.சேகர், திட்டங்கள் அலகின், தலைமைப் பொறியாளர், ஆர்.விமலா, திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு அலகின் தலைமைப் பொறியாளர், திருமதி.எஸ்.உஷா தேவி, சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத் திட்ட அலகின், தலைமை பொறியாளர் டி.ஜெபசெல்வின் கிளாட்சன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் எஸ்.பழனிவேல், சிறப்பு தொழில்நுட்ப அதிகாரி இரா.சந்திரசேகர், மற்றும் அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் கோட்டப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.