சென்னை: தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். கடந்த 15ம் தேதி, சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்த) சட்டமுன்வடிவு குறித்த உயர்கல்வித் துறை அமைச்சர் அறிக்கை வருமாறு: தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்த) சட்டமுன்வடிவு குறித்து சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள், மாநில தனியார் பல்கலைக்கழகங்களாக உயர விழையும்போதும், புதிதாக தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கும் தற்போதுள்ள சில வழிமுறைகளை எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டது.
அதேசமயம் இச்சட்ட திருத்தத்தில் இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாகும்போது அதனால் மாணவர்கள் நலனோ, பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நலனோ, எந்த வகையிலும் பாதிக்கப்படாத வண்ணம் உரிய சட்ட பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.உயர்கல்வியை பொறுத்தவரை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்து வரும் தமிழ்நாட்டில், தற்போதுள்ள தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் 2019, பிரிவு 4ன்படி, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு குறைந்தபட்ச நில அளவு 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப்படுகிறது. ஆனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் அத்தகைய மிகப்பெரிய அளவிலான தொடர்ச்சியான நிலத்தை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் பிற அண்டை மாநிலங்களின் தனியார் பல்கலைக்கழகங்களின் சட்டங்களுக்கு இணங்க, நிலத்தின் அளவு குறைக்கப்பட்டால், பல்கலைக்கழகங்களாக மாற விரும்பும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும் என்ற கருத்துகள் பெறப்பட்டன. இதன் மூலம், புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் அமைவதையும், விதிமுறைகளின்படி தகுதியுள்ள தனியார் கல்லூரிகள் மாநில தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றம் பெறுவதையும் ஊக்குவிக்க முடியும். எனவே, மாணவர் சமூகத்தின் நலனுக்காகவும், மாநிலத்தில் உயர்கல்வியை மேலும் மேம்படுத்தவும், தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு தேவையான நிலங்கள் தொடர்பான விதிமுறைகளை எளிமைப்படுத்த இந்த சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டமுன்வடிவின்படி குறைந்தபட்ச நில அளவு கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி 25 ஏக்கர், நகராட்சி அல்லது பேரூராட்சி 35 ஏக்கர், பிற பகுதிகள் 50 ஏக்கர், சமூகநீதியிலும் உயர்கல்வி மேம்பாட்டிலும் ஆழ்ந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்ட திராவிட மாடல் அரசு, எந்த நிலையிலும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது.
மாநில இடஒதுக்கீட்டு உரிமையை கருத்தில் கொள்ளாத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், இப்பொருள் குறித்து சட்டமன்றப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையிலும் இந்தச் சட்ட முன்வடிவு குறித்து கல்வியாளர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், கல்வித்துறை அலுவலர்கள் ஆகியோரின் கருத்துகளைப் பெற்று, அதன் அடிப்படையில் உரிய மேல் நடவடிக்கை தொடரலாம் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இந்த சட்டமுன்வடிவு திரும்பப் பெறப்பட்டு உரிய மறு ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
