சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை, நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு களஆய்வு மேற்கொண்டார்
சென்னை, சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை, நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு களஆய்வு மேற்கொண்டார்கள். சென்னை அண்ணா சாலையில், சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை, வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 3.20 கி.மீ. நீளத்திற்கு, நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் ரூ.621 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் 19.1.2024 அன்று தொடங்கி வைத்தார்.
இம்மேம்பாலப் பணிகளின் முன்னேற்றத்தை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , இன்று (24.7.2025) நேரில் பார்வையிட்டு, களஆய்வு மேற்கொண்டார். தற்போது, 30% பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மெட்ரோ சுரங்கப்பாதை மற்றும் பிற இடங்களில் நடைபெறும் அடித்தள, மைக்ரோ பைல், ஜியோ சிந்தடிக் லேயர் மற்றும் வெல்டிங் பணிகளை விரைவாக முடிக்கவும், மழைக் காலத்திற்கு முன் அடித்தள பணிகள் நிறைவு பெறும் வகையில் பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
உயர்மட்ட மேம்பாலப் பணிகள் நடைபெறும் இடங்களில் போக்குவரத்து காவல்துறை, மின் வாரியம், மாநகராட்சி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம், வனத்துறை ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகள் நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளை முடிக்கவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். இந்தக் களஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ் இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் இரா.சந்திரசேகர், தலைமை பொறியாளர்(கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு) கு.கோ.சத்யப்பிரகாஷ், கண்காணிப்புப் பொறியாளர் வி.சரவணசெல்வம், கோட்ட பொறியாளர் பி.சந்திரசேகர், ஒப்பந்ததாரர் ஜே குமார் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.