Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள போர் விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு களஆய்வு மேற்கொண்டார்!

சென்னை: இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தை ஒட்டி, வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி(ஞாயிறு) போர் விமான சாகச நிகழ்ச்சிகள் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுவதையொட்டி இன்று (03.10.2024) நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் 6ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்ட போர் விமானப் படை சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த போர் விமான சாகச 72 போர் விமானங்கள் பங்கேற்கின்றன. இதற்கு பொது மக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, 15 லட்சம் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேஜாஸ் மற்றும் சுகோய் சு-30 MKI போர் விமானங்கள் மற்றும் சாரங் குழுவின் ஹெலிகாப்டர்கள் உட்பட பல்வேறு IAF விமானங்களும் சாகசத்தில் இடம்பெறுகின்றன. இந்த நிலையில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் களஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளிடம் பணிகளின் நிலை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக, பொதுமக்கள் அதிகளவில் வருகைதர உள்ளதால், பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? குடிநீர், கழிவறை, அடிப்படை வசதிகள், கடல் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அமைச்சர் நேரில்ஆய்வு மேற்கொண்டார்.

அதேபோல், முதலுதவி சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவைக்கான ஏற்பாடுகள் எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், ஒன்றிய அமைச்சர்கள், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், விமானப்படை உயர் அதிகாரிகள், முப்படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ககூடிய நிலையில் அதற்காக அமைக்கப்பட்டுள்ள மேடை மற்றும் கூடாரங்களின் பணிகளையும் களஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, பொதுப்பணித்துறையின் சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் எஸ்.மணிவண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.