Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளாவில் அமைந்திருக்கின்ற கண்ணகி கோயிலை மேம்படுத்தவும், மாதந்தோறும் பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு உண்டான வழிகாணவும் நடவடிக்கை: சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கம்பம் நா.ராமகிருஷ்ணன்( திமுக) பேசுகையில் “வண்ணாத்திப் பாறை மேல் சிதிலமடைந்துள்ள கண்ணகி திருக்கோயிலுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த அரசு ஆவண செய்யுமா? என்றார். இதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், “1800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மங்கலதேவி கண்ணகி திருக்கோயில் முழுவதுமாக சிதலமடைந்து நிலையில் இருக்கின்றது. இந்த திருக்கோயிலுக்கு செல்வதற்கு மூன்று வழிகள் பயன்படுத்தப்படுகின்றன ஒன்று பலியங்குடி கிராமத்தின் வழியாகவும் மற்றொன்று கூடலூர் கிழக்கு நாயக்கன் வழியாகவும் இன்னொரு வழி குமிழி வழியாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வழி முழுவதும் வனத்துறை பாதுகாப்பில் இருக்கின்றது.

தமிழக முதல்வய் பாரதிய ஜனதா கட்சியினுடைய உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் கோரிக்கையை ஏற்று முழுமையாக களஆய்வு செய்து, மூன்று வழித்தடங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் மங்கலதேவி டிரஸ்ட் என்ற அமைப்பு கேரளா அரசாங்கத்தின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற இந்த திருக்கோயிலை திருச்சி மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றம் அதை நீங்கள் கேரளா நீதிமன்றத்திலேயே தீர்வு காண வேண்டும் என்று அந்த வழக்கை திருப்பி இருக்கின்றார்கள். அந்த வழக்கு நிலுவையில் இருக்கின்றது.

இது சம்பந்தமாக 19.01.2025 அன்று சென்னைக்கு வந்திருந்த கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை நானும், துறையின் செயலாளராக இருந்த சந்திரமோகனும்சந்தித்து அவரிடம் கோரிக்கைகளை முன் வைத்தோம். அந்த திருக்கோயில் ஆண்டுக்கு ஒருமுறை சித்ரா பௌர்ணமிக்கு தான் திறக்கப்படுகின்றது. அதை மாதந்தோறும் பௌர்ணமிக்கு திறக்க வேண்டும் என்பதை முதல் கோரிக்கையாகவும், அந்த திருக்கோயிலை தமிழக அரசே முழுவதுமாக புனரமைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதை இரண்டாவது கோரிக்கையாகவும், வனத்துறையோடு இணைந்து அந்த திருக்கோயிலை புனரமைக்கின்ற பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதை மூன்றாவது கோரிக்கையாகவும், தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்கின்ற ஐயப்ப பக்தர்களுக்காக சபரிமலையில் ஐந்து ஏக்கர் நிலம் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்பதை நான்காவது கோரிக்கையாகவும் முன் வைத்தோம்.

மேலும், இதுதொடர்பாக கேரளாவின் அறநிலையத்துறை அமைச்சர் அவர்களோடு கலந்தாய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றோம். இது குறித்து விரைவில் ஒரு கலந்தாய்வு கூட்டத்றிற்கு ஏற்பாடு செய்வதாக கேரள முதலமைச்சர் உறுதி அளித்து இருக்கின்றார். ஆகவே கேரளாவில் அமைந்திருக்கின்ற இந்த கண்ணகி கோயிலை மேம்படுத்தவும், மாதந்தோறும் பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு உண்டான வழி காணவும் தமிழக முதல்வரின் ஆலோசனைகளை பெற்று தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.