Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்

சென்னை: மாநில ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50% இடங்களை தக்க வைக்க கோரி ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவிற்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் அனுப்பியுள்ளார்.

மாநில ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாடு உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்கள் குறித்த ஒரு முக்கியமான பிரச்சினையை தங்களது அவசர கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ படிப்புகளில் 50 விழுக்காடு இடங்கள் தமிழ்நாட்டில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீட் எஸ்.எஸ் (NEET - Super Speciality) தேர்வில் மாநில இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு 27.05.2025 அன்று நிறைவடைந்தது. 29.05.2025 அன்று, தமிழ்நாடு தேர்வுக் குழு, பணியில் உள்ளவர்களுக்கு விரும்பும் வகையில் இடங்களை தேர்வு செய்ய அனுமதிக்கும் வகையில், 2-வது மாநில சுற்று அட்டவணையைக் குறிப்பிடுமாறு DGHS-ஐ முறையாக கேட்டுக்கொள்ளப்பட்டது.

நீட் எஸ்.எஸ், மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வின் 2-வது சுற்றில் மாநில பணியில் உள்ள மாணவர்களுக்கு விரும்பும் வகையில் இடங்களை தேர்வு செய்ய, மருத்துவ விண்ணப்பதாரர்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். ஆனால், மாநில அளவில் கட்டாய இரண்டாம் சுற்று கலந்தாய்வு நடத்தாமல், நிரப்பப்படாத பணியிடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்றுவது, தமிழ்நாடு அரசு பணியில் உள்ள மருத்துவர்கள் விரும்பும் வகையில் இடங்களை தேர்வு செய்யவோ அல்லது மேற்கொண்டு கலந்தாய்வில் பங்கேற்கவோ அவர்களுக்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும். மேலும், இது மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு முரணானதாகும்.

எனவே, மாநில ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாட்டில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து 50 விழுக்காடு இடங்களும் தக்கவைக்கப்பட்டு, மாநில அளவிலான நீட் எஸ்.எஸ் கலந்தாய்வின் 2-வது சுற்றில் கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த பொருட்பாட்டில் தங்களது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.