Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாதுகாப்பாகவும், நீடித்து நிலைக்கும் வகையிலும் மக்களுக்கு பயனளிக்கும் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் : அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை

சென்னை: சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சாலைகள் அமைப்பதில் தரக்கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆய்வு கூட்டத்தினை நடத்தினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தற்போது 74,021 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இச்சாலை கட்டுமானத்தில் தரக்கட்டுப்பாடு மிக முக்கிய பங்களிக்கிறது. இது நீடித்த, பாதுகாப்பான மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் தரமான சாலைகளை உறுதி செய்வதற்கும், வாகன இயக்க செலவுகளை குறைப்பதற்கும், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் சாலை அமைக்கப்படவேண்டும். புதிய முறையில் மூன்று அடுக்கு தரக்கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் தர உறுதியினை செயல்படுத்த தமிழக அரசால் கடந்த 2010ம் ஆண்டு டிச.24ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, தரக்கட்டுப்பாடுக்காக தனியாக அலகு உள்ளது. இவர்களுக்கு சாலைப் பராமரிப்பு பணியோ அல்லது மதிப்பீடுகள் தயாரிக்கும் பணியோ இல்லை. முழுக்க முழுக்க தரத்தில்தான் கவனம் செலுத்த வேண்டும். சாலை அகலப்படுத்தும் போதும், மண்வேலை, ஜி.எஸ்.பி, டபிள்யு. எம்.எம் போன்ற பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளுக்கு உரிய தரக்கட்டுப்பாடு பரிசோதனை செய்யப்பட வேண்டும். வெட்மிக்ஸ் என்றாலே ஈரக்கலவை என்றுதான் அர்த்தம். ஜல்லியின் அளவு மற்றும் ஈரப்பதம் சரியானபடி இருந்தால்தான் சாலையில் இறுகு தன்மை உறுதிப்படுத்த முடியும். தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள் கான்கிரீட்க்கு ஏழு நாட்கள் மற்றும் 28 நாட்களுக்கு உறுதி சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை உரிய பதிவேட்டில் பதியப்பட்டு என்னுடைய ஆய்வுக்கு வரும்போது பொறியாளர்கள் பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என உத்தரவிடுகிறேன்.

அதேபோல், பாலங்கள் மற்றும் தடுப்புச்சுவர்களில் பயன்படுத்தப்படும் கம்பிகளின் தரம் மற்றும் எடை உரிய முறையில் சோதனை செய்து பதிவேட்டில் பதியப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.