Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலின் போது, முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன், 2021 மார்ச் 27ம் தேதி, தொகுதியில் உள்ள கருங்குளம், கோழிபத்தி கிராமங்களில் தேர்தல் விதிகளை மீறி, திமுக கொடி கம்பங்களை நட்டு, தோரணங்கள் கட்டி பிரசாரம் செய்ததாக பேரையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதேபோல, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து 2021 ஏப்ரல் 2ம் தேதி ராஜகண்ணப்பன் தேர்தல் விதிகளை மீறி, 15 வாகனங்களில் பிரசாரம் செய்ய வந்ததாகவும், பட்டாசு வெடித்ததாகவும் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இரண்டு தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கவும், வழக்குகளை ரத்து செய்யவும் கோரி அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த இரண்டு வழக்குகளில் ஒரு வழக்கில் அதிகபட்சம் ஒரு ஆண்டு மட்டுமே தண்டனை விதிக்க முடியும். மற்றொரு வழக்கில் அபராதம் மட்டுமே விதிக்க முடியும். மூன்று ஆண்டுகள் தாமதமாக வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் கீழமை நீதிமன்றம் அதனை கோப்புக்கு எடுத்திருக்க கூடாது என்ற அமைச்சர் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, இரு தேர்தல் விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார். இதேபோல, திருச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ இனிக்கோ இருதயராஜுக்கு எதிரான கொரோனா விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.