அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், வெவ்வேறு பதவிகளுக்கு பணம் பெற்றது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சேர்த்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை.
அனைத்து வழக்குகளையும் சேர்த்து விசாரித்தால், வழக்கு விசாரணை முடங்கும். 2 ஆயிரத்துக்கும் அதிகமான குற்றம் சாட்டப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், 600க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையை முடிக்க 1500 ஆண்டுகளாகும் என்பதால் வழக்குகளை தனித்தனியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில், குற்றச்சாட்டுகள் ஒரே மாதிரியானவை. வழக்குகளை சேர்த்து விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குகளை சேர்த்து விசாரிப்பது என்பது சிறப்பு நீதிமன்றத்தின் முடிவுதான் என தெரிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரில் ஒருவர் தரப்பில், வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர் கோரவில்லை. சேர்த்து விசாரிப்பதால் புகார்தாரருக்கு எந்த பாதிப்பும் இல்லை. மனுதாரர், 3ம் நபர் வழக்கில் அரசு தரப்பு சாட்சியல்ல வழக்குகளை தனித்தனியாக விசாரித்தால் தான் தாமதமாகும் என்பதால், சேர்த்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி தான் என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.


