Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Thursday, August 7 2025 Epaper LogoEpaper Facebook
Thursday, August 7, 2025
search-icon-img
Advertisement

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்படும் முகாமினை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

சென்னை: தொழிலாளர்களை தேடி பணியிடம் சார்ந்த தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்படும் முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாமினை தொடங்கி வைத்தார்கள். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை, கிண்டி, திரு.வி.க.நகர் தொழிற்பேட்டையில், சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் தொழிலாளர்களை தேடி பணியிடம் சார்ந்த தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்படும் முகாமினை தொடங்கி வைத்தார்கள். பிறகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

அறிவிப்பு எண் 111 - தொடக்கம்

முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்றைக்குக்கூட நடப்பாண்டு நிதிநிலை அறிவிப்பின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 2 அறிவிப்புகள் நேற்றைக்கு செயலாக்கம் பெற்றது. ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் 118 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. ஆகையால் இன்று அறிவிப்பு எண் 111 செயல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மக்களைத் தேடி மருத்துவம் என்பது மக்கள் நல்வாழ்வுத்துறையின் சிறப்பு திட்டங்களில் முதன்மையான திட்டமாக உள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் கடந்த 05.08.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சாமணப்பள்ளியில் தொடங்கி வைத்தார்கள்.

முதலமைச்சர் அவர்களால் இத்திட்டம் தொடங்கும்போது ஒரு கோடி பயனாளர்களை சென்றடையும் திட்டமாக இருக்க வேண்டும் என்கின்ற வகையில் அவர்களுடைய விருப்பத்தை தெரிவித்தார்கள். ஆனால் இத்திட்டம் பெரிய அளவில் வெற்றி அடைந்து இத்துறையின் அலுவலர்கள் கடினமாக உழைத்து குறிப்பாக களப்பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை துறையினால் இத்திட்டம் இன்று 2 கோடியே 34 இலட்சத்து 88 ஆயிரத்து 431 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள்.

குறிப்பாக 2 கோடி பேர் தாண்டிய அளவிற்கு பயன்பெற்றிருக்கும் நிலையில் 2024 செப்டம்பர் திங்கள் 25 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் ஐ.நா மன்றம் உலகில் தொற்றா நோய்களுக்கு வீடுகளுக்கே தேடி சென்று மருத்துவம் பார்க்கின்ற நாடு எது என்று அவர்கள் ஆராய்ந்து அறிந்தபோது தமிழ்நாடு மிகச் சிறப்பாக இந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு United Nation Interagency Task Force Award 2024 விருதினை மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐநா மன்றம் வழங்கியது.

அந்தவகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மகத்தான சிறந்த வகையில் இருந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அனைத்து மக்களையும் இந்த திட்டம் சென்றடைந்திட வேண்டும் என்கின்ற வகையில் ஒருவர் கூட இந்த திட்டத்தினால் பயன்பெறாமல் விடுபட்டிருக்க கூடாது என்கின்ற நிலை இருக்க கூடாது என்கின்ற வகையில் இந்த திட்டத்தை தொடர்ந்து விரிவுப்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.

தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம்

2024 ஜனவரி திங்கள் 09 ஆம் தேதி நான் வீடுகளுக்கு தேடிச் சென்று மக்களிடம் பரிசோதனை செய்யும்போது ஆண் தொழிலாளர்களாக இருந்தாலும் தொழிற்கூடங்களில் பணியாற்றுகின்ற மகளிராக இருந்தாலும் தொழிற்கூடங்களுக்கு சென்று விடுவதால் அவர்களுக்கும் தொழிற்சாலைகளுக்கே சென்று மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தின்படி, அவர்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்வது என்கின்ற வகையில் திருவள்ளுர் மாவட்டம் ஹீண்டாய் மோசிஸ் (Hyundai Mosis) கம்பெனியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தோம்.

இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 711 தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற 8,35,000 பேரை கணக்கில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில் இதுவரை 3,90,111 பேர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 30,506 பேருக்கு புதிய நோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை நோய் பாதிப்புகள் அறியாது வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களை அதாவது நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் அல்லது இரண்டும் சேர்ந்து இருப்பது என்கின்ற நிலைகள் தெரியாமல் இருந்தவர்கள் 30,506 பேர். மேலும் ஏற்கெனவே தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் என்கின்ற வகையில் 12,468 பேருக்கு வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்திடும் வகையில் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, அறிவிப்பு எண் 111ன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறு வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனைகள் மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தின்படி வழங்கப்படும் என்கின்ற அறிவிப்பின்படி, இன்றைக்கு சென்னை, கிண்டி, திரு.வி.க.நகர் தொழிற்பேட்டையில் பரிசோதனைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் மட்டும் 250 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்று தொடங்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 7,750 சிறுவணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்ளுக்கு பயன்பெறும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 8 இலட்சம் தொழிலாளர்கள் பயன்பெறும்வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதைப் பொறுத்தவரை தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள், வணிக நிறுவனங்களில் பணிபுரிவர்கள் என்கின்ற வகையில் 6 இலட்சம் பேரை முதற்கட்டமாக இலக்கு வைத்து இத்திட்டத்தை இன்றைக்கு தொடங்கி இருக்கிறோம். இத்திட்டத்தின்மூலம் மிகப் பெரிய பலனை மக்கள் பெறுவார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

மக்களைத் தேடி மருத்துவம் - சென்னையில் பயன் பெறுபவர்கள் எண்ணிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை இத்திட்டத்தில் ஏற்கெனவே 25,92,103 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் 13,29,945 பேர், நீரிழிவு நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் 6,52,856 பேர், இந்த இரண்டு நோயும் இருப்பவர்கள் 5,79,353 பேர், வலி நிவாரண சிகிச்சை வேண்டி காத்திருப்பவர்கள் 10,194 பேர், இயன்முறை பிசியோதெரபி சிகிச்சை வேண்டி காத்திருப்பவர்கள் 16,934 பேர், டயாலிசிஸ் 83 பேர் ஆக 25,92,103 பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும் சென்னை மாநகரில் இருக்கின்ற தகவல் தொழில்நுட்ப தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்களில் பணியாற்றுகின்ற 6 இலட்சம் பேரை இலக்கு வைத்து இத்திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் அமீத், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், மண்டலக்குழுத் தலைவர் துரைராஜ், நகர நல அலுவலர் மரு.ஜெகதீசன், மாமன்ற உறுப்பினர் மோகன்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.