சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற ரூ.30 கோடி கடனை சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதால் 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இயக்குனராக உள்ள நிறுவனத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2021ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, ரவிச்சந்திரனுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தார். இதனை சிபிஐ, தமிழ்நாடு சமரச தீர்வு மையத்திற்கு தலா ரூ.15 லட்சம் என பிரித்து செலுத்த வேண்டும் என்று கூறி வழக்கை ரத்து செய்தார்.இந்நிலையில், சிபிஐ வழக்கு ரத்து செய்யப்பட்டதால், சிபிஐ தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மூல வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், சோதனையின் போது அமலாக்கத்துறை கைப்பற்றிய ரொக்க பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவித்திருந்தனர்.