Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன் போர்க்குணமுள்ள சிங்கத்தின் கால்களும் பழுதுபடாது; சீற்றமும் குறையாது: பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். போர்க்குணமுள்ள சிங்கத்தின் கால்களும் பழுதுபடாது; அதன் சீற்றமும் குறையாது என பாமக தொண்டர்களுக்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சமூகநீதியின் அடையாளமாகவும், அனைத்து தரப்பு மக்களின் பாதுகாவலனாகவும் திகழும் பாமக வரும் 16ம் தேதி 36 ஆண்டுகளை நிறைவு செய்து, 37ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

பாமகவின் துணை இல்லாமல், மக்களுக்கான எந்த நியாயமும், மத்தியிலோ - மாநிலத்திலோ இதுவரை யாராலும் பெற்று தரப்படவில்லை என்ற ஒன்றே போதுமானது. நம்மை பொறுத்தவரையில் தேர்தல் தூரத்தில் இருக்கிறது, மிக அருகில் வந்து விட்டது என்ற அரசியல் கணக்கு போட்டு மக்கள் பணிக்கான திட்டமிடலை வைத்துக்கொள்வது இல்லை. எல்லா நாட்களும் மக்களுக்கான நாட்கள்தான். 365 நாட்களும் மக்களை நேரில் சென்று சந்தியுங்கள்.

அவர்களின் வாழ்விலும், தாழ்விலும் இணைந்து இருங்கள். இது தான், 37ம் ஆண்டு தொடக்க விழா வாக்குறுதியாக அனைவரும், இதை உறுதிபட ஏற்று கொள்ளுங்கள். எதிர்வரும் எல்லா ஆண்டுகளிலும் இதை கைவிடாது கடைபிடியுங்கள். மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு விஷயத்துக்கும் யாரையும் - எப்போதும் எதிர்க்கும் இடத்தில் பா.ம.க. நிற்கும் என்பதை என்னுடைய இறுதிமூச்சுவரை உறுதியாக கடைபிடிப்பேன்.

முன்பை விட புதிய உற்சாகத்துடன் புதிய எழுச்சியுடன் எந்த போராட்டத்தையும் மக்களுக்காக முன்னெடுக்க தயாராகவே இருக்கிறேன். இனி நமக்கெல்லாம் பொற்காலம் தான். நீங்கள் குக்கிராமங்களில் இருக்கிறீர்களோ, நகரங்கள்- தலைநகரங்களில் இருக்கிறீர்களோ; உங்கள் வீடுகள், அலுவலக முகப்புகளில் பாமகவின் கொடிகளை ஏற்றுங்கள். ஏழை மக்களுக்கு சட்ட உதவியும், மருத்துவ உதவியும், கல்வி உதவியும் செய்வதில் முதன்மையான நபர்களாக இருங்கள்.

அதேபோல், உழைப்பை ஒருபோதும் கை விட்டு விடாதீர்கள், உங்களின் உற்சாகக்குரலே என்னை புதுப்பிக்கிறது; என்னை உற்சாகப்படுத்துகிறது; இன்னும் போராட சொல்கிறது; எதிரே எத்தனைபேர் என்று கணக்கு வைத்துக் கொள்ளாமல் மோதி பார்க்க சொல்கிறது; எதிர்க்க இளைஞர்களை மட்டுமே மனசு எதிர்பார்க்கிறது; இத்தனை தெம்பும், தினவும் உங்களின் அரவணைப்புதான் எனக்கு கொடுக்கிறது.

உங்களின் நெடுநாள் கனவை நிறைவேற்ற எனக்குள் புதுரத்தம் பாய தொடங்கி இருக்கிறது. அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்பாடோ உங்களுக்கு தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். போர்க்குணமுள்ள சிங்கத்தின் கால்களும் பழுதுபடாது, அதன் சீற்றமும் குறையாது; மக்களுக்காக கொடுக்கும் அதன் கர்ஜனையும் மாறாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.