Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டிருக்கும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீரை சேமித்து வைக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் தெளிவான உத்தரவை பிறப்பித்த பின்பும் தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்க முன்வராத கர்நாடக அரசு, தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக உபரிநீரை திறந்துவிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்திற்கான காவிரி நீரை திமுக அரசு கேட்டுப்பெற தவறியதன் மூலமாகவும் காவிரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாசன சாகுபடியின் பரப்பளவு பெருமளவு குறைந்திருப்பதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள ஆற்றுப் படுகைகள் முறையாகவும், முழுமையாகவும் தூர்வாரப்படாத காரணத்தினால் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் பாசனத்திற்கு பயனில்லாமல் வீணாக கடலில் கலக்கும் சூழல் உருவாகியிருப்பதாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டிருக்கும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து நிறுத்தும் வகையில், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள உபரி கால்வாய்களை திறந்து ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீரை சேமித்து வைத்து விவசாயிகளின் தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.