Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகக் கட்டிடத்தில் ஏசியில் இருந்து வெளியேறும் நீர் மறுபயன்பாட்டு ஆலை திறப்பு!!

சென்னை : சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் குளிரூட்டும் இயந்திரத்திலிருந்து வெளிவரும் தண்ணீரை சேகரித்து மறுபயன்பாடு செய்யும் ஆலை திறக்கப்பட்டது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில் குளிரூட்டும் இயந்திரத்திலிருந்து வெளிவரும் தண்ணீரை சேகரித்து மறுபயன்பாடு செய்யும் ஆலை நிறுவப்பட்டது. இந்த ஆலையை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. எம்.ஏ. சித்திக், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திட்ட இயக்குனர் திரு. டி. அர்ச்சுனன், நிதி இயக்குநர் திரு.எஸ். கிருஷ்ணமூர்த்தி, அமைப்புகள் மற்றும் இயக்கத்தின் இயக்குநர் திரு. மனோஜ் கோயல், தலைமைப்பொது மேலாளர்கள் திரு. ஏ.ஆர்.ராஜேந்திரன், (மெட்ரோ இரயில், சமிக்கை மற்றும் தொலைத்தொடர்பு), திரு. ஆர். முரளி, (நிதி மற்றும் கணக்கு), தலைமை ஆலோசகர்கள் திரு. ராஜீவ் ஸ்ரீவஸ்தவா (சுற்றுச்சூழல்), திரு. கோபிநாத் மல்லையா (இயக்கம் மற்றும் பராமரிப்பு), ஆலோசகர் திரு.எஸ். ராமசுப்பு (மெட்ரோ இரயில்இயக்கம்), கூடுதல் பொது மேலாளர் திரு. எஸ். கார்த்திகேயன், (மின் மற்றும் இயந்திரம்), திரு. கே. சுதாகர், (பராமரிப்பு) மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நந்தனத்தில் அமைந்துள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸ் இந்திய பசுமை கட்டிடக் கவுன்சிலால் (IGBC) பிளாட்டினம் தரச்சான்று பெற்றுள்ளது. ஒரு அடித்தளம் மற்றும் 12 மாடிகளும் கொண்ட இந்தக் கட்டிடம் முழுமையாக குளிர்சாதன வசதி கொண்டது மற்றும் பசுமை கட்டிடத் தரநெறிகளை பின்பற்றுகிறது. இக்கட்டிடம் அக்டோபர் 27, 2022 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்தக் கட்டிடத்தில் 43 Air Handling Units (AHUs) மற்றும் 29 Ceiling Suspended Units (CSUs) உள்ளன, இவை அனைத்து மாடிகளிலும் மற்றும் முக்கியமான அறைகளிலும் குளிர்சாதன வசதிகளை வழங்குகின்றன, இவை மொத்தம் 1750-TR குளிரூட்டல் திறன் கொண்டவை. குளிர்சாதன செயல்பாட்டின் போது, ஈரமான காற்று AHU-களின் குளிரூட்டும் காயில்கள் வழியாக செல்லும் போது நீர்த்துளிகளாக வடிகால் தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. பொதுவாக, இந்த நீர் கழிவு நீராக வெளியேற்றப்படும்.

இந்த ஆலை Air Handling Units மற்றும் Ceiling Suspended Units குளிரூட்டும் இயந்திரத்திலிருந்து வெளிவரும் தண்ணீரை சேகரித்து மறு பயன்பாட்டுக்காக மீண்டும் பயன்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தினசரி சராசரியாக 10,000 லிட்டர் நீர் பெறப்படுகிறது, இது மொத்த கட்டிட நீர் பயன்பாட்டின் சுமார் 25% ஆகும். இந்த திட்டம் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பராமரிப்பு பிரிவின் கீழ் இயங்கும் மின்சாரம் மற்றும் இயந்திரம் துறையால் ரூ.1.5 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சராசரி 3,650 கிலோ லிட்டர் நீர் பெறப்பட்டு வருடத்திற்கு சுமார் ரூ.6 லட்சம் நீர் கட்டணச் செலவில் சேமிப்பு செய்யப்படுகிறது.

இந்த முயற்சி, (Reduce, Reuse & Recycle Principle) குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி கொள்கையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வாழ்க்கையின் அருமருந்தான நீரைப் பாதுகாப்பதை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். இது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் நீரை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முக்கியமான முயற்சியாகும்.