Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மெட்ரோ ரயில் பணிக்காக நிதி தர மறுக்கிறது ஒன்றிய அரசிடம் நிதி பெற எங்களுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்: எடப்பாடிக்கு முதல்வர் அழைப்பு

பேரவையில் நேற்று, ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எதிர்க்கட்சி தலைவர் (எடப்பாடி பழனிசாமி) மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். மெட்ரோ ரயில் வேண்டாம் என்று கூறி, மோனோ ரயிலுக்கு கொடி பிடித்தவர்கள் இன்று மெட்ரோ ரயிலுக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு உங்களது (அதிமுக) ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தாலும், அதனை செயல்படுத்துவதற்கு நீங்கள் ஆட்சியில் இருந்தவரை முனைப்புக் காட்டவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான், பணி ஆணைகள் வழங்கப்பட்டன, அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டன.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி தொடர்பான கோரிக்கைகளை வைக்கிறேன். 6 நாட்களுக்கு முன்பு கூட பிரதமருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறேன். இதற்கான ஒன்றிய அரசின் நிதியை இதுவரை தராததால், இந்த முழுத்தொகையையும் மாநில அரசின் நிதியில் இருந்தும், மாநில அரசு வாங்கும் கடனில் இருந்து மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதுநாள் வரை பாஜவோடு கூட்டணியில் இருந்தபோது பேசாமல் இருந்த எதிர்க்கட்சி தலைவர் இப்போதாவது பேசுகிறாரே என்ற அளவில் ஆறுதல் தருகிறது. இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை, எதிர்க்கட்சி தலைவர் எங்களுடன் இணைந்து ஒன்றிய அரசிடம் நிதி பெற குரல் கொடுக்க வேண்டும்.

நேற்றையதினம் எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் அரசாணை வெளியிடப்பட்டதா? நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதா? என்று கேட்டார். தொகுதிகளில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை, அந்தந்த கலெக்டர்களிடம் அனுப்பி வைக்குமாறு, நான் கடந்த 22-08-2022 அன்று எம்எல்ஏக்களுக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டேன். அதனடிப்படையில் பெறப்பட்ட பணிகள் 07-10-2023 அன்று எனது தலைமையில் நடைபெற்ற உயர்நிலை குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது.

நடப்பாண்டில் 234 தொகுதிகளில் 797 பணிகள் ரூ.11 ஆயிரத்து 132 கோடியில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டு, அதில் 582 பணிகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றில் 63 பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சி தலைவர் இத்திட்டத்தின்கீழ் அளித்த தொகுதியின் கோரிக்கைகளில், ஐந்து கோரிக்கைகள் நடப்பாண்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு மூன்றுக்கு உரிய ஆணைகள் வெளியிடப்பட்டு ஒரு பணி முடிக்கப்பட்டுள்ளது. 2 பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 2 பணிகளுக்கு அரசாணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த அரசு “சொல்வதைத்தான் செய்யும், செய்வதைத்தான் சொல்லும்” என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவிக்கிறேன். இவ்வாறு பேசினார்.

* இஸ்லாத்துக்கு மாறும் ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடுக்கு பரிசீலனை

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்த மக்கள் இஸ்லாத்தை தழுவினால், அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இந்த முரண்பாட்டை களைய வேண்டும் என ஒரு நீண்டகால கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு தேவையான நலத் திட்டங்களையும், ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த, சிறுபான்மையின மக்களின் நலன்களை பாதுகாத்து வரும் இந்த அரசு அவரது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, ஆவன செய்யப்படும்.

* 2.50 லட்சம் வீடுகள் பழுதுபார்ப்பதற்கு ரூ.2,000 கோடி

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையில், “முக்கியமான ஒரு அறிவிப்பையும் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிராமப்புற விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2001ம் ஆண்டிற்கு முன் பல்வேறு அரசு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட ஏறத்தாழ 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழுதுபார்க்கவும், புனரமைக்கவும் ரூ.2,000 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்.