Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் உயிர் தப்பி சென்னை வந்தோம்: கால்பந்து ரசிகர்கள் பேட்டி

சென்னை: அர்ஜென்டினா நாட்டு கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக வந்துள்ளார். முதல்கட்டமாக, நேற்று முன்தினம் மாலை கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் மெஸ்ஸி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சென்ற ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குழுமியிருந்தனர்.

ஆனால் ரசிகர்களை மெஸ்ஸி நேரில் சந்திக்க முடியாதபடி, மேடையில் ஏராளமான அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஒன்றுகூடி புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர். இதனால் ரசிகர்கள் கடும் ரகளையில் ஈடுபட்டனர்.  இதையடுத்து அங்கு சிறிது நேரமே இருந்த மெஸ்ஸி, கலவரம் காரணமாக உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில், சென்னையில் இருந்து கொல்கத்தாவில் மெஸ்ஸியை பார்ப்பதற்காக விமானத்தில் சென்ற ரசிகர்கள், நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு விமானத்தில் திரும்பி வந்தனர். விமான நிலையத்தில் அவர்கள் கூறுகையில், ‘‘கொல்கத்தா மைதானத்தில் மெஸ்ஸியை அரசியல்வாதிகள் சூழ்ந்துகொண்டு படமெடுத்தபடி, அவரை ரசிகர்கள் பக்கம் விடவே இல்லை. இதனால் அவர் வெறுப்படைந்து சிறிது நேரத்திலேயே திரும்பி சென்றுவிட்டார்.

இதனால் நாங்கள் சென்னையில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை செலவழித்து சென்று, அங்கு மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதுதான் மிச்சம். கொல்கத்தா மைதானத்தில் மெஸ்ஸி வாகனத்தில் வந்து, இளம் கால்பந்து வீரர்களுடன் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனினும், அவரை அரசியல்வாதிகள் சூழ்ந்துகொண்டு எதுவும் செய்ய விடாததால், 15 நிமிடத்திலேயே புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் அங்கு ஏற்பட்ட கலவரத்தில் நாங்கள் உயிர் தப்பி ஓடிவந்து, சென்னைக்கு ஏமாற்றத்துடன் திரும்பி இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.