Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் ஊழல்.. ஒன்றிய அரசு அதிகாரிகள், போலி சாமியார் உட்பட 34 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..!!

டெல்லி: மருத்துவ கல்லூரி அனுமதி முறைகேட்டில் ஒன்றிய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் பெரும் முறைகேடு நடைபெற்றிருப்பது அம்பலமான நிலையில், ஒன்றிய அரசு அதிகாரிகள், போலி சாமியார் உட்பட 34 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

போலி சாமியாரின் கல்லூரிக்கு லஞ்சம் பெற்று அனுமதி

போலி சாமியார் மருத்துவ கல்லூரி அனுமதிக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வுக்கு வருபவர்களை முன்கூட்டியே அறிந்து போலி சாமியார் ரவிசங்கர் லஞ்சம் தந்ததாக புகார் எழுந்தது.

இடைத்தரகராக செயல்பட்ட யுஜிசி முன்னாள் தலைவர்

ஆய்வுக்கு வரும் அதிகாரிகளை கண்டறிய ரவிசங்கருக்கு முன்னாள் யுஜிசி தலைவர் டி.பி. சிங் உதவி செய்துள்ளார். இவர் மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் பல்கலை.யில் வேந்தராக உள்ளார். ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் விவரத்தை பெற போலி சாமியார் ரவிசங்கர் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் தந்துள்ளார். ஆய்வின்போது ஆந்திராவிலிருந்து மருத்துவர்களை அழைத்து சென்று பேராசிரியர்களாக நடிக்க வைத்தது அம்பலமானது.

ரூ.55 லட்சம் லஞ்சம்: 3 என்எம்சி மருத்துவர்கள் கைது

போலி சாமியார் மஹராஜிடம் லஞ்சம் பெற்ற என்எம்சி மருத்துவர்கள் 3 பேர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.55 லட்சம் லஞ்சம் பெற்று ரவிசங்கர் மருத்துவ கல்லூரிக்கு சாதகமாக அறிக்கை தந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிண்டிகேட் அமைத்து கோடிகளை குவித்த சுகாதாரத்துறை

அனுமதி வழங்குவதில் நடந்த முறைகேட்டில் ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு என சிபிஐ தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகள் சிண்டிகேட் அமைத்து பெரும் முறைகேடு செய்துள்ளனர். முறைகேடுகள் மூலம் ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள் பல கோடி சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லஞ்சத்தை ஹவாலா பணமாக பெற்ற ஒன்றிய அரசு அதிகாரிகள்

மருத்துவ கல்லூரிகளுக்கு இடைத் தரகர் மூலம் முன்கூட்டியே தகவல் தந்து லஞ்சம் வாங்கியது அம்பலமானது. மேலும், லஞ்ச பணத்தை ஹவாலா பரிவர்த்தனை மூலம் ஒன்றிய அரசு அதிகாரிகள் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்றிய சுகாதாரத்துறையில் ஊழல்: சிபிஐ வழக்குப்பதிவு

லஞ்சம் தரும் மருத்துவ கல்லூரிகளுக்கு அதிகாரிகளை ஆய்வுக்கு அனுப்பி அறிக்கை தயாரித்தது அம்பலமான நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் பூனம் மீனா, தரம்வீர், ப்யூஸ் மால்யாவை குற்றவாளிகளாக சிபிஐ சேர்த்தது.

பல மாநிலங்களில் ஒன்றிய அரசு அதிகாரிகள் லஞ்ச வேட்டை

பல மாநிலங்களில் மருத்துவ கல்லூரிகளிடம் ஒன்றிய அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பெரும் முறைகேடு பற்றி CBI வழக்கு பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.