சிவகாசி: நோய் தாக்கி இறந்த கால்நடைகளின் மாமிசத்தை சாப்பிட்டால் ஆந்தராக்ஸ் நோய் பரவும் என்றும், அதன் பிரேதத்தை ஆழக்குழி தோண்டி சுண்ணாம்பிட்டு புதைத்திட வேண்டும் என கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். கால்நடைகளை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்றான அடைப்பான் நோய் மிக முக்கியமானது. இந்நோய் கண்ணிற்கு தெரியாத ஆந்தராக்ஸ் எனும் பாக்டீரியா நுண்ணுயிர் கிருமி மூலம் பரவும் தொற்று நோயாகும். இந்நோய் ஆடுகள், மாடுகள் மற்றும் வனவிலங்குகள், மனிதர்களை தாக்கும். இது குறித்து கால்நடை பராமரிப்பு துறையினர் கூறியிருப்பதாவது: இந்நோய் தாக்கிய கால்நடைகள் திடீரென இறக்கும்.
இறந்த கால்நடைகளின் வாய், மூக்கு மற்றும் ஆசன வாயிலிருந்து கருஞ்சிவப்பு நிற உறையாத ரத்தம் வெளியேறி இருக்கும். இறந்த கால்நடையின் வயிறு பெரிதாக வீங்கி இருக்கும். நோய் கிருமிகள் பாதித்த தீவனம் மற்றும் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் நோய் பரவும். நோய் தாக்கி இறந்த கால்நடைகளை எக்காரணம் கொண்டும் அறுத்து தின்று விடக்கூடாது. இறந்த கால்நடைகளை ஆழக்குழி தோண்டி சுண்ணாம்பிட்டு புதைக்க வேண்டும். இறந்த கால்நடைகள் கிடந்த இடத்திலுள்ள மண்ணை பார்மலின் திரவத்தை ஊற்றி கிளறிவிட வேண்டும். கால்நடைகளுக்கு நோய் அறிகுறிகள் தோன்றிய பின் மருத்துவம் செய்யும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.
எனவே, கால்நடைகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் அடைப்பான் நோய் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். அடைப்பான் நோயினால் இறந்த ஆடு, மாடுகளை அறுப்பவர் மற்றும் தோலுரிப்பவர் மூலம் மற்ற மனிதர்களை இந்நோய் தாக்கும். நோயால் தாக்கி இறந்த கால்நடைகளின் மாமிசத்தை சாப்பிடுபவர்கள் இந்நோய் தாக்கி இறக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர்.