Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் நவ.20ம் தேதி புதிய கட்சியை தொடங்கும் மல்லை சத்யா: திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று பேட்டி

சென்னை: மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், நவ.20ம் தேதி புதிய கட்சியை மல்லை சத்யா தொடங்குகிறார். சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அதற்கான பெயரை அறிவிப்போம் என்றும், திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்றும் மல்லை சத்யா கூறினார். மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. மதிமுகவை தொடங்கிய காலம் தொட்டு பயணித்தவர் மல்லை சத்யா.

கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்ற பெரிய பொறுப்பில் இருந்தவர். கட்சியில் வைகோவின் மகனான துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு எழுந்ததால் துரை வைகோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனையடுத்து, கட்சிப் பொறுப்பில் இருந்து மல்லை சத்யாவை தற்காலிமாக நீக்கிய வைகோ, 15 நாட்களில் அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, வைகோவுக்கு மல்லை சத்யா எழுதிய கடிதத்தில், 32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சி சக்கையாக தூக்கி எறிய துடிக்கும் உங்கள் பூர்ஷ்வா அரசியலை நாடு பார்க்கிறது.

அதற்கான விலையை நிச்சயம் நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியே தீருவார்கள் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து மதிமுகவில் இருந்து மல்லை சத்தியாவை நிரந்தரமாக நீக்கி பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டார். இனி மதிமுகவில் மீண்டும் இணைய மல்லை சத்யாவுக்கு வாய்ப்பில்லை என்பது தெளிவானது. இதன் தொடர்ச்சியாக ஏற்கெனவே மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத், தேவதாஸ், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் உள்ளிட்டவர்களுடன் மல்லை சத்யா ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இது தொடர்பாக மல்லை சத்யா கூறியதாவது: தனது மகனின் அரசியலுக்காக மதிமுகவில் இருந்து வைகோவால் தூக்கி வீசப்பட்டோம். கருத்தியல் ரீதியாக இயங்க வேண்டும் என்ற உணர்வோடு தனியாக ஒரு இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதால் நவம்பர் 20ம்தேதி புதிய கட்சி தொடங்க உள்ளோம். மதவாத சக்திகள் கை ஓங்கிக் கொண்டு வரும் இந்தக் காலகட்டத்தில், எங்களுடைய சிறிய சக்தியை திராவிட இயக்கத்துக்கு ஆதரவாக நிறுத்த வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு நல்லாட்சியைத் தந்து கொண்டிருக்கிறார். நாங்கள் திமுகவுக்கு ஆதரவாக நிற்போம். 2026-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பதற்கு நாங்கள் துணை இருப்போம்.

வாய்ப்பு கிடைத்தால் தேர்தல் களத்தில் போட்டியிடவும் தயாராக இருக்கிறோம். ​புதிய இயக்கத்தின் பெயர் மற்றும் கொடி ஆகியவை நவம்பர் 20ம் தேதி சென்னையில் அறிவிக்கப்படும். இத்தனை ஆண்டுகள் சரியான வழியில் சென்று கொண்டிருந்த மதிமுக தற்போது மகன் திமுகவாக மாறிவிட்டது. இயக்க தலைவர் இயக்கத் தலைவராக இல்லாமல் குடும்பத் தலைவராக சுருங்கி விட்டார். துரை வைகோவுக்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்க விருப்பமில்லை. அவர் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு ஒன்றிய அமைச்சர் பதவியை பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறார். புதிய கட்சி தொடங்கும் எங்களை, மகனைக் கடந்து வைகோ மானசீகமாக வாழ்த்துவார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.