Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதிமுகவில் இருந்து நான் விலகவில்லை வைகோவுக்கு எதிராக நீதி கேட்டு மல்லை சத்யா உண்ணாவிரதம்: துரை வைகோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

சென்னை: வைகோவுக்கு எதிராக நீதி கேட்டு மல்லை சத்யா உண்ணாவிரதம் தொடங்கினார். துரை வைகோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு கூறி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதிமுகவில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் மல்லை சத்யாவுக்கும் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோருக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன. சமீபத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டார்’ என்று கூறியிருந்தார்.

இதனால் வைகோவுக்கு எதிராக நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டத்தை மல்லை சத்யா அறிவித்தார். அதன்படி தனது ஆதரவாளர்களுடன் நேற்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்ற மல்லை சத்யா மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிம்சன் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செய்தார்.அதன்பின்னர் தீவுத்திடல் அருகே சிவானந்தா சாலையில் நேற்று காலை 9 மணி முதல் அவரது தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டத்தை தொடங்கினார். இதில், மதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்டத்தின் இடையே மல்லை சத்யா நிருபர்களிடம் கூறியதாவது: மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று வைகோ சொன்ன காரணத்தினால் தான் மக்களிடம் நீதி கேட்டு இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளேன். இதுகுறித்து வைகோவிடம் பேச வேண்டுமென்றால், துரை சொன்னால் தான் பேச முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான், உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க இந்த அறப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்.

மதிமுகவில் நான் இன்றைக்கும் துணை பொதுச்செயலாளராக தான் நீடித்துக் கொண்டிருக்கின்றேன். அவரும் நீக்கவில்லை நானும் விலகவில்லை. தனது மகன் வருகைக்கு முன்பாக 28 ஆண்டுகாலம் ஜனநாயகவாதியாக வைகோ இருந்தார். மகன் வருகைக்குப் பின்னால் மறுமலர்ச்சி விலகி மகன் திமுகவாக மாறி இருக்கிறது மதிமுக. துரை வைகோ அரசியலுக்கு வந்த பிறகு தான், அடிமட்டத்திலிருந்து வந்தவர்களுக்கு மரியாதை இல்லாமல் போனது.

மதிமுக அலுவலகத்தில் வைகோ முன்னிலையில் நடந்த இணைப்பின் போது, துரை வைகோ கையை கொடுத்ததே ஒரு அநாகரிகமான முறையில் புறங்கையை தான் எனக்கு கொடுத்தார். அவர் கைகளும் இணையவில்லை, இதயங்களும் இணையவில்லை. வைகோவின் மனம் கலங்கக்கூடாது என்பதனால் ஒரு பண்பாடு இல்லாத ஒரு நபருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.