நெல்லை: பாளையங்கோட்டை தொகுதியில் 1989ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் தாயகம் குருநாதன்.. பின்னர் வைகோவுடன் மதிமுகவில் சேர்ந்த அவர் கடந்த 2024ல் மதிமுகவில் இருந்து விலகி அப்போதைய மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜவில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த நவ.26ம் தேதி பாஜவில் இருந்து விலகிய குருநாதன், வைகோ முன்னிலையில் மீண்டும் மதிமுகவில் இணைந்தார்.
இதுகுறித்த அறிவிப்பும் மதிமுக சார்பில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் கடந்த 28ம் தேதி பாஜ வழக்கறிஞர் பிரிவு, கல்வியாளர் பிரிவு புதிய நிர்வாகிகள் பட்டியலை பாஜ மாநில தலைவரும், நெல்லை தொகுதியின் எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் வெளியிட்டார். இந்த அறிவிப்பில் மதிமுகவில் 26ம் தேதி இணைந்த முன்னாள் எம்எல்ஏ குருநாதன் பாஜ வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்த பட்டியலை பார்த்த நெல்லை மாவட்ட பாஜவினரே அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
பாஜவில் இருந்து விலகி மதிமுகவில் இணைந்தவருக்கு 2 நாட்கள் கழித்து பாஜவில் பதவி வழங்கியது எப்படி என கேள்வி எழுந்தது. அதுவும் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையைச் சேர்ந்தவர். நெல்லை தொகுதியின் எம்எல்ஏவாகவும் உள்ளார். சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கூட எந்த கட்சியில் தற்போது இருக்கின்றனர் எனத் தெரியாமல் அறிவிப்பு எப்படி வெளியானது என பாஜவைச் சேர்ந்தவர்களே கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் நெல்லை பாஜ நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


