Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்

சென்னை: சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், 2025-26ம் கல்வியாண்டிற்கான தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடப் பங்கீட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கடந்த வருடங்களில் நீட் தேர்வு முடிவு வெளியான பின்பு தான் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பல்வேறு காரணங்களால் நீட் தேர்வு முடிவு வெளியாவது காலம் தாழ்த்தப்படும்போது மாணவர்களின் விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் மிகவும் குறைந்து போகிறது.

இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். எனவே இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்த பிறகு மாணவர்களின் 12ம் வகுப்பு இறுதி தேர்வு முடிவு வெளியான பின்னர் பெறப்பட்டால் மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதுடன் விண்ணப்பங்கள் சரி பார்ப்பதற்கும் அதிக கால அவகாசம் கிடைக்கும். இதனால் இந்த ஆண்டு ஜூன் 6ம் தேதி முதல் இளங்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கடந்தாண்டு மருத்துவப்படிப்பில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களில் எம்பிபிஎஸ் படிப்பில் 6 பேர் போலி ஆவணங்களை அளித்து சேர்ந்தது கண்டறியப்பட்டு, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க முன்கூட்டியே விண்ணப்பங்களை பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.