Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயிலாடுதுறை டிஎஸ்பி சஸ்பெண்ட்: உள்துறை செயலாளர் உத்தரவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் தனது அலுவலகத்திற்கு நடந்தே சென்ற வீடியோவும், உயர் அதிகாரிகள் தனக்கு டார்ச்சர் தருவதாக கூறி பேட்டி அளித்ததும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இதை முற்றிலுமாக மறுத்த எஸ்.பி அலுவலகம், சுந்தரேசனுக்கு மாற்று கார் வழங்கப்பட்டது. அவர் மீது பாலியல், லஞ்ச குற்றச்சாட்டுகள் உள்ளதாக அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக், நேற்று முன்தினம் நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் எஸ்பி மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் டிஎஸ்பி மீது உள்ள குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கமாக கேட்டறிந்தார்.

விசாரணை முடிவில், டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய உள்துறை செயலாளர் தீரஜ்குமாருக்கு மத்திய மண்டல ஐஜி ஜோஷி நிர்மல் குமார் பரிந்துரை செய்திருந்தார். அதன் அடிப்படையில் டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில், பொது ஊழியருக்கான விதிமுறைகளை மீறி, ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாலும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி பேட்டி அளித்ததாலும், உயர் அதிகாரிகள் உத்தரவுகளை பின்பற்றாததாலும், தனக்கு கீழ் வேலை பார்க்கும் போலீசாரை மைக்கில் அவதூறாக பேசியதாலும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று காலை அலுவலகத்திற்கு டிஎஸ்பி சுந்தரேசன் நடந்து சென்றார். அவர் செல்லும் வழியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: என் மீது பாலியல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். அப்போது நான் தவறு செய்திருந்தால் என்னை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் என்னை இடமாற்றம் செய்கிறார்கள். என்னை விசாரிக்காமல் எப்படி டிஐஜி சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைக்கலாம். சென்னையில் உள்ள எனது தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. தமிழக டிஜிபி ஏன் என்னை அழைத்து இன்னும் விசாரிக்கவில்லை எனவும் தெரியவில்லை. நான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். என் மீது தவறு இருந்தால் தூக்கில் போடவும். தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக எனது பிரச்னையை விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* ஏட்டும் சஸ்பெண்ட்

மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் விவகாரம் தொடர்பாக, தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நேற்று மயிலாடுதுறை எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்டறிந்தார். இந்நிலையில் டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய அவர் மத்திய மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை வெளியிட்டதாக எஸ்பி அலுவலக ஏட்டு சரவணனை (43) சஸ்பெண்ட் செய்து எஸ்பி ஸ்டாலின் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.