மயிலாடுதுறையில் உருவாகிறது ஒரு ‘அத்திப்பட்டி’ நாதல்படுக்கை திட்டு கிராமத்தை கபளீகரம் செய்யும் கொள்ளிடம் ஆறு
*ஆற்றுக்குள் சென்ற 15 வீடுகள்
*100 ஏக்கர் விளை நிலம் பாழ்
கொள்ளிடம் : கொள்ளிடம் ஆறு ஒரு கிராமத்தையே மெல்ல மெல்ல கபளிகரம் செய்து வருவதால், பாறாங்கற்களை கொட்டி தடுப்பு சுவர் அமைத்து காப்பாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றில் நாதல்படுகை திட்டு கிராமம் உள்ளது.
இங்கு சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றின் திட்டுப் பகுதியில் உள்ள இந்த கிராமத்தை தொட்டு இங்குள்ள மண்ணை அரித்து ஆற்றுக்குள் கொள்ளிடம் ஆறு இழுத்துச் சென்று கொண்டே இருக்கிறது.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம், இந்தத் திட்டு கிராமத்தின் ஒரு பகுதி நீருக்குள் அடித்துச் செல்லப்பட்டு விடுகிறது. வருடம் தோறும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய போதெல்லாம் அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் இந்த திட்டு கிராமத்தை தொட்டு கரைத்து தான் சென்று கொண்டிருக்கிறது.
இங்குள்ள விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் இங்கு பயிரிடப்படும் அனைத்து வகையான நெற்பயிர் மற்றும் தோட்ட பயிர்களை சாகுபடி செய்து பயன்படுத்தி வருகின்றனர். இங்கு செழிப்பான நிலப் பகுதியாக இருந்து வருவதால் அனைத்து பயிர் சாகுபடியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் இங்குள்ளவர்களுக்கு போதிய வேலை மற்றும் வருவாயும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 20 வருட காலத்தில் நாதல் படுகை திட்டு கிராமத்தில் இருந்த சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பு கொள்ளிடம் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. 15 குடிசை வீடுகள் இருந்த இடம் தற்போது ஆறாக காட்சி அளிக்கிறது. தொடர்ந்து ஆற்று வெள்ளப்பெருக்கால் வருடம் தோறும் மண் அரித்து செல்லப்பட்டு வருகிறது.
இந்த வருடம் இரண்டு முறை கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் இரண்டு குடிசை வீடுகளும் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இந்த திட்டு கிராமம் வருடம் தோறும் கொஞ்சம் கொஞ்சமாக அதன் பரப்பளவு குறைந்து கொண்டே செல்கிறது. தொடர்ந்து இப்படியே சென்றால் மீதம் இருக்கின்ற இந்த செழிப்பான திட்டுப் பகுதி கிராமம் முழுமையும் கொள்ளிடம் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டு செல்லும் அபாய நிலையில் இருந்து வருகிறது.
மீதமுள்ள இந்த திட்டு கிராம பகுதியை காப்பாற்ற வேண்டும் என்று அங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் இந்தத் திட்டு கிராமத்திற்கு சற்று தூரத்தில் இருந்த காசிதிட்டு, கலையன்திட்டு ஆகிய இரு திட்டு கிராமங்களும் கடந்த 60 வருடங்களுக்கு முன்பு ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. அங்கு வசித்தவர்கள் கொள்ளிடம் வட்டார பகுதியில் வெளியேறி வந்து குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர்.
உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு திட்டு கிராமங்களைப்போல இந்த நாதல் படுகை கிராமமும் தண்ணீரால் அடித்துச் செல்லப்படும் அபாய நிலையில் இருந்து வருகிறது. எனவே செழிப்பாக இருந்து வரும் இந்த நாதல்படுகை கிராமத்தை ஆற்று நீருக்குள் அடித்துச் செல்லாத வகையில் உடனடியாக காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு இந்த திட்டு கிராமத்தைச் சுற்றி பாறாங்கற்களை கொட்டி தடுப்புச் சுவர் அமைத்து ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


