Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீலகிரி மாவட்டத்தில் பஸ் சேவையை அதிகப்படுத்துவது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்

*போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பஸ் சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை கலெக்டர் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என ஊட்டியில் நடந்த ஆலோசனை கூட்டம் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஒருங்கிணைந்து நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து சேவை அதிகப்படுத்துவது குறித்த கலந்தாய்வு கூட்டம் ஊட்டியில் நடந்தது. போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜெகதீஸ் தலைமை வகித்தார். ஆர்டிஒ., நேர்முக உதவியாளர் ரவி முன்னிலை வகித்தார்.

நுகர்வோர் அமைப்புகள் சார்பில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன், புளுமாவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் முகமது சலீம் உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது பஸ் சேவை குறைக்கப்பட்டு உள்ளது. ஆனால், மக்கள் தொகை அளவு அதிகரித்து உள்ளது.

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் 35 ஆயிரம் பேர் இலவச பயணத்திற்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் உள்ளூர் பஸ் சேவை என்பது போதிய அளவு இல்லை.

பெரும்பான்மையான பஸ்கள் வெளிமாவட்ட பஸ்களாக மற்றப்பட்டு விட்டன. இதனால் உள்ளூர் சேவை என்பது மேலும் குறைந்து விட்டதால் உள்ளூர் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும். ஏற்கனவே இயக்கி நிறுத்தப்பட்டுள்ள 110 பஸ் சேவைகளை தொடர மீண்டும் அனுமதி கேட்டு பெற வேண்டும். வெளி மாவட்ட சேவைகளை குறைத்து கொண்டு உள்ளூர் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும். பஸ்கைள சுத்தப்படுத்தி இயக்க வேண்டும்.

உரிய அட்டவணை நேரங்களில் பஸ்கள் சேவையை இயக்குவதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும். ஊட்டி - மேட்டுப்பாளையம், ஊட்டி - குன்னூர், ஊட்டி - கூடலூர், கூடலூர் - பந்தலூர், ஊட்டி - கோத்தகிரி என வழித்தடங்களில் 30 நிமிடத்திற்கு ஒரு பேருந்து அடிப்படையிலாவது முறைப்படுத்தி இயக்க வேண்டும்.

ஓட்டுநர் நடத்துனர்கள் பயணிகளிடம் முறையாக நடந்து கொள்ள வேண்டும். கட்டண பட்டியல் அனைத்து பேருந்துகளிலும் ஒட்ட வேண்டும். கிளை மேலாளர்கள் அலைபேசி அழைப்பில் முறையாக எப்போதும் பயணிகளின் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும். கிளை மேலாளர்கள் பொதுமக்களின் அழைப்பை ஏற்கும் வகையில் செயல்பட வேண்டும்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகள் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மினி பேருந்துகள் இயக்குவதை காரணம் காட்டி இயங்கும் அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைக்க கூடாது என வலியுறுத்தினர்.

பொது மேலாளர் ஜெகதீஸ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் நேர்முக உதவியாளர் ரவி ஆகியோர் பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் பஸ் சேவை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை கலெக்டர் மூலம் போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் முதல்வருக்கு பரிந்துரை செய்யப்படும். நீலகிரியில் ஒருநாளைக்கு சராசரியாக 2 லட்சம் முதல் 2.30 லட்சம் பயணிகள் சென்று வருகின்றனர். மொத்தம் 337 பஸ்கள், 11 நகர பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதில் 140 பேருந்துகள் நீலகிரியில் மட்டும் இயக்கப்படுகிறது. 129 பேருந்துகள் கிராமங்களில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. மீதமுள்ளவை கிளைகள் இருந்து நேரடியாக வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது.

இவை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்ளூர் சேவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய பஸ்கள் இயக்க மேலாண் இயக்குநர் ஒப்புதல் கேட்டு பரிந்துரை செய்துள்ள வழித்தடங்கள் அனுமதி கிடைத்தால் பொதுமக்களுக்கு கூடுதல் சேவை கிடைக்கும்.

பஸ்கள் முறையாக இயங்குவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடத்துனர்கள் பயணிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள அறிவுரை வழங்கப்படும். பழைய பஸ்கள் படிப்படியாக மாற்றப்படுகிறது. தற்போது புதிய பஸ்கள் ஒதுக்கீடு ஆணை பெறப்பட்டுள்ளது.

பேருந்து வந்தவுடன் பழைய பேருந்துகள் மாற்றப்படும். கோவை காந்திபுரத்தில் இருந்து பயணிகளை ஏற்றி வர கலெக்டருக்கு அறிக்கை அளித்து அரசின் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் பேசினர்.