*அதிகாரிகள் தகவல்
ஈரோடு : ஈரோடு மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மாஸ் கிளீனிங் மூலம் 10 டன் கழிவுகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பள்ளிகள், சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மாதந்தோறும் மாஸ் கிளீனிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தலின் பேரில், 1வது மண்டலம் 24வது வார்டு, 2வது மண்டலம் 36வது வார்டு, 3வது மண்டலம் 30வது வார்டு, 4வது மண்டலம் 52வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், மாஸ் கிளீனிங் பணிகள் நேற்று நடைபெற்றது.
இதில், ஒவ்வொரு வீடு வீடாக மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல், தெருக்களை கூட்டி சுத்தம் செய்தல், முக்கிய பிரதான சாலைகளில் தேங்கியுள்ள மண் அள்ளுதல், தேவையற்ற குப்பைகளை அகற்றுதல், வாய்க்கால்கள் தூர்வாருதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மாஸ் கிளீனிங் பணியில் 180க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். இப்பணிகளை, மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,‘‘ஈரோடு மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மாஸ் கிளீனிங் பணியில் 180க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதில், சாக்கடை கால்வாய்களில் தேங்கியிருந்த சாக்கடை கழிவுகள், சாலையில் தேங்கியிருந்த மண், குப்பை என 10 டன் அளவிற்கு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது’’ என்றார்.