Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

29 ஆண்டுகள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை விவாகரத்து செய்தார் மனைவி: தீர்க்க முடியாத இடைவெளி உருவானதால் பிரிவதாக அறிவிப்பு

* மகன் வேண்டுகோள் ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த நேரத்தில் எங்களது பெற்றோரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுக்க அன்புடன் கேட்டு கொள்கிறேன். புரிந்து கொண்டதற்கு நன்றி’ என்று கூறி உள்ளார்.

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், இசைப்புயல் என்ற அழைக்கப்படுபவருமான ஏ.ஆர்.ரகுமான் 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி சென்னையில் பிறந்தார். திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர். இவருடைய தந்தை ஆர்.கே.சேகர். இவர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். ஏ.ஆர்.ரகுமானின் தாய் கஸ்தூரி.

சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கித்தார் வாசிக்கக் கற்று கொண்டார். மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். இவர் தனது இசைப்பயணத்தை 1985ல் தொடங்கினார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார்.

பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார். 1992ல் தனது வீட்டிலேயே இசைக் கலையகத்தை அமைத்தார். மணிரத்தினம் இயக்கத்தில் 1992ம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படம் இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இத்திரைப்படம் இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் வெளியான மின்சாரக் கனவு திரைப்படம், 2002ல் வெளியிடப்பட்ட ‘லகான்’ இந்தி மொழி திரைப்படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படமும் இவருக்குத் தேசிய விருதுகள் வாங்கித் தந்தன. முத்து திரைப்படம் ஜப்பானில் வெற்றி பெற்று, இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது.

2012ல் இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலேயே நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது. தமிழ், இந்தி , ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து உள்ளார். ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்காக 2 ஆஸ்கர் விருது மற்றும் கோல்டன் குளோப் விருது , பாப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். இவருக்கு 2010ம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூஷண் விருது அளிக்கப்பட்டது.

ஏ.ஆர்.ரகுமானுக்கு 1995ம் ஆண்டு சாய்ரா பானு என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பானு காதிஜா, கீமா ரகுமானியா என்ற மகள்களும் அமீன் மகனும் உள்ளனர். இந்நிலையில், ஏ.ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு, தனது கணவரை பிரியவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு சாய்ரா பானு அளித்துள்ள ஒரு அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்கள் கழித்து, எனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்.

இந்த முடிவு, தங்கள் உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சில உணர்ச்சிபூர்வமான அழுத்தத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டது. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், எங்களுக்கு இடையே சிரமங்களும், தீர்க்க முடியாத இடைவெளியும் உருவாகியது. இதன் பின்னர் பிரியும் முடிவை எடுத்தேன்’ என்று கூறி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான்-சாய்ரா பானு திருமண வாழ்க்கை 29 ஆண்டுகளுக்கு பின் முடிவடைந்திருப்பது திரையுலகு உள்பட அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.