*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மண்டபம் : மண்டபம் அருகே மரைக்காயர்பட்டிணம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட சாலைகள் சேதமடைந்தும், விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மரைக்காயர்பட்டிணம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட தெருப்பகுதிகள் உள்ளது. சில பகுதிகளில் சாலைகள் சேதம், மின் விளக்கு எரியாமல் இருப்பது உள்பட அடிப்படை வசதிகள் குறைபாடுகளாக உள்ளது.
இதனால் ராமநாதபுரம் சட்டமன்றத்துக்கு உட்பட்ட இந்த பகுதியை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மரைக்காயர்பட்டிணம் தெருப் பகுதிகளில் சாலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் சாலைகள் போடப்பட்டு உள்ளது.
இந்த சிமெண்ட் சாலைகள் அதிகமாக சேதம் அடைந்து, பொதுமக்கள் நடக்க முடியாத அளவுக்கு குண்டும் முடியுமாக காணப்படுகிறது. ஆதலால் இந்த தெரு பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து பொதுமக்கள் அவதிப்படாமல் நடப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள், தெருப்பகுதிகள் ராமேஸ்வரம், ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைதூரத்திற்கு மேல் அமைந்துள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வெளியூர்களில் சென்று இரவு நேரத்தில் பேருந்துகளில் வந்து இறங்கி நடந்து செல்ல வேண்டும். பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிராம பகுதிக்கு செல்லும் வரை சாலைகளில் இருபுறமும் அமைந்துள்ள மின்கம்பங்களில், எரியாமல் பழுதாகி விட்டது.
இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆதலால் ஊராட்சி மன்றத்திற்கு பராமரிப்புக்கான நிதிகளை வழங்கி, ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் மற்று தெருப்பகுதிகளுக்கு மின்விளக்குகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரைக்காயர்பட்டிணம் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. மாணவர்கள் கூடுதலாக வருவதால் வகுப்பறைகள் போதுமானதாக இல்லை.
கூடுதலான கட்டிடம் கேட்டு கிராமப் பகுதி பொதுமக்களும் பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தீர்மானங்கள் வைத்தோம். ஆனால் பலன் இல்லாமல் உள்ளனர். அரசுக்கு கூடுதலான வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிராம பகுதிகளில் ஊராட்சி அலுவலகங்கள் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகளை பிரித்து எடுத்து உரமாகவும், சாலைகள் அமைப்பது என குப்பைகளை மாற்றுவதற்கு பல்வேறு நிதிகளை வழங்கி செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மறைக்காயர் பட்டிணம் பகுதியில் கடலோரப் பகுதியில் அருகே மக்கும் குப்பை, மக்கா குப்பைகளா பிரித்து எடுப்பதற்கு தனித்தனி தொட்டிகள் கட்டப்பட்டு உரங்கள் போன்றவை தயாரித்து செயல்பட்டு வந்துள்ளது.
ஆனால் இந்த தொட்டிகள் சேதம் அடைந்து இந்த திட்டம் முடக்கப்பட்டுள்ளது.இதனால் இந்த ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவு குப்பைகள் கடலில் கலந்து கடலுக்குள் தேக்கமடைந்து விடுகிறது.
இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடலோர பகுதி அருகே கட்டப்பட்டுள்ள மக்கும் குப்பை மக்கா குப்பை தொட்டிகளை சீரமைப்பதற்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை பிரித்தெடுத்து உரங்களாக மாற்றுவதற்கு இயந்திரங்கள் வழங்கி சுற்றுச்சூழலை பாதுகாத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
மரைக்காயர் பட்டிணம் கிராம பகுதியில் வசித்து வரும் சிறு குழந்தைகள் பயிலும் வகையில் அங்கன்வாடி பள்ளி தற்போது பழமையான ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகம் இங்கு நடைபெறாமல் ஒரு கிலோ மீட்டர் தொலை தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே கிராம சேவை மையத்தில் நடைபெற்று வருகிறது. அதனால் அங்கன்வாடி பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரக்காயர்பட்டிணம் ஊராட்சி அலுவலகம் தற்போது ராமேஸ்வரம்,ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே கிராம சேவை மையம் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் இந்த ஊராட்சி அலுவலக அதிகாரிகளை சந்தித்து அடிப்படை தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிப்பதற்கும், அணுகுவதற்கும் மிகவும் இடைவெளியாக உள்ளது.
மேலும் ஒரு கிலோ மீட்டர் தொலைதூரத்தில் நடந்து வந்து இந்த அலுவலகத்தை நாடும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதற்காக வயதானவர்கள், முடியாதவர்கள் ஆட்டோ பிடித்து கட்டணம் செலுத்தி வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் மரைக்கார் வட்டம் கிராமத்தில் முன்னதாக இயங்கி வந்த ஊராட்சி அலுவலகம் கட்டிடம் பூட்டி கிடைக்கிறது. இதை திறந்து மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.