Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணிப்பூருக்கு 3வது முறையாக சென்றார்: இனக்கலவரத்தால் பாதித்த மக்களுடன் ராகுல் சந்திப்பு; பலரும் கண்ணீர் சிந்தியபடி பேசினர்

இம்பால்: இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு 3வது முறையாக சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்கு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மணிப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பாக பெரும்பான்மையின மெய்தி இனத்தவர்களுக்கும், பழங்குடியின குக்கி சமூகத்தினருக்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு மே 3ம் தேதி பயங்கர கலவரம் வெடித்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வீடுகளை இழந்து, கலவரத்தால் பாதித்த மக்கள் கடந்த 14 மாதத்திற்கும் மேலாக அரசின் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.

கலவரத்திற்குப் பிறகு இதுவரையிலும் பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக கேள்வி எழுப்பி வருகின்றன. அதே சமயம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலவரம் நடந்த சில வாரங்களுக்குப் பிறகு மணிப்பூருக்கு முதல் முறையாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மணிப்பூரில் இருந்து தொடங்கினார்.

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்நிலையில், மக்களவை தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் முதல் முறையாக நேற்று மணிப்பூருக்கு மீண்டும் சென்றனர். மணிப்பூருக்கு 3வது முறையாக ராகுல் சென்றிருப்பது, மக்கள் நலன் மீது கொண்ட அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை காட்டுவதாக காங்கிரஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. மணிப்பூரின் ஜிரிபாம் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்ற ராகுல், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார். முதலில், ஜிரிபாம் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை ராகுல் காந்தி பார்வையிட்டார்.

இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா அளித்த பேட்டியில், ‘‘பாதிக்கப்பட்ட மக்களின் தேவை குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தார். அப்போது ஒரு பெண், தங்களை பிரதமர் மோடியோ, மாநில முதல்வரோ வந்து சந்திக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டுமெனவும் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தினார்’’ என்றார். ஜிரிபாமில் இருந்து அசாமில் உள்ள சில்சார் வழியாக இம்பால் விமான நிலையத்திற்கு வந்த ராகுல், சாலை வழியாக சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள துய்போங் கிராமத்தில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்று மக்களை சந்தித்தார். முகாமில் இருந்த மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ராகுலை வரவேற்றனர். பலரும் அவரிடம் கண்ணீர் சிந்தியபடி தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.ஆளுநர் அனுசுயா உய்கேயையும் ராகுல் சந்தித்து பேசினார்.

* அசாம் மக்களை காக்கும் சிப்பாய்

மணிப்பூர் பயணத்திற்கு நடுவே அசாமின் கச்சார் மாவட்டத்திற்கு ராகுல் நேற்று சென்றார். அசாமில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் 24 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,000 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மழை வெள்ளத்திற்கு 60 பேர் பலியாகி உள்ளனர். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்த ராகுல் காந்தி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். மேலும் அண்டை மாநிலமான மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த தாலைன் முகாமில் வசிப்பவர்களையும் ராகுல் சந்தித்து பேசினார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், ‘‘அசாம் மக்களுக்கு ஆதரவாக துணை நிற்கிறேன். நாடாளுமன்றத்தில் நான் அவர்களின் சிப்பாய். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் விரைவாக வழங்குமாறு ஒன்றிய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். ‘வெள்ளத்தால் பாதிக்கப்படாத அசாம்’ என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த பாஜவின் இரட்டை இன்ஜின் அரசின் ஒட்டுமொத்த மோசமான நிர்வாகத்தை பலி எண்ணிக்கை காட்டுகிறது’’ என்றார்.