இம்பால்: மணிப்பூரில் நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ராவில் உள்ள ஜகுராடார் காராங் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மநபர்கள் அங்கிருந்த ஏராளமான கடைகளுக்கு தீ வைத்தனர். மேலும் அங்கிருந்த சில வீடுகள் உட்பட சிஆர்பிஎப் முகாம் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தியதால் துப்பாக்கி சண்டை வெடித்தது.
சிஆர்பிஎப் வீரர்களின் துப்பாக்கி சூட்டில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது இரண்டு சிஆர்பிஎப் வீரர்களும் காயமடைந்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த 5 பேர் மாயமாகியுள்ளனர். அவர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனரா அல்லது மோதல் வெடித்ததால் எங்கேவாது பதுங்கி இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தீவிரவாதிகளின் சடலங்கள் போரோபெக்ரா காவல்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதனிடையே சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள கோனோம்பாய் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சனிக்கிழமை அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் மணிப்பூர் போலீசார் இணைந்து தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின்போது ஏராளமான துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.