Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம்; மாம்பழம் சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும்: இந்திய தேர்தல் ஆணையத்திடம் ராமதாஸ் தரப்பு முறையீடு

திண்டிவனம்: அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம். நானே தலைவராக செயல்படுவதால் கட்சி சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்ட மேடையில் ராமதாஸ்- அன்புமணி இடையே பகிரங்கமாக வெடித்த மோதல் இதுவரையிலும் முடிவுக்கு வரவில்லை. தந்தை, மகன் மாறிமாறி குற்றச்சாட்டுகளை கூறியதால் மூத்த நிர்வாகிகள் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கட்சி விவகாரம் மட்டுமின்றி குடும்ப பிரச்னையும் இந்த மோதலின் பின்னணியாக இருந்ததால் ஒரு குறிப்பிட்ட நிலையை தாண்டி யாராலும் இவ்விவகாரத்தில் சமாதான முயற்சிகளில் ஈடுபட முடியாத நிலையும் ஏற்பட்டன. இதனால் பாமக இரண்டாக பிளவுபட்டுள்ளது.

கட்சியின் நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், கீழ்மட்ட நிர்வாகிகள் வரை விரிசலை ஏற்படுத்த தொடங்கியது. இதனிடையே நேற்று ராமதாஸ் திண்டிவனத்தில் பாமக செயற்குழுவையும், அன்புமணி சென்னை பனையூரில் பாமக நிர்வாக குழு கூட்டத்தையும் தனித்தனியாக கூட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். திண்டிவனத்தில் நடந்த கூட்டத்தில் பொதுவெளியில் கட்சி நிறுவனருக்கு அன்புமணி களங்கம் ஏற்படுத்தியதாக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன. கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை வழங்கியும் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. அத்துடன் ராமதாசின் மூத்தமகள் காந்திமதி மேடையில் அமரவைக்கப்பட்டதோடு, அன்புமணி படம், பெயர் பேனர்களில் புறக்கணிக்கப்பட்டது.

இதேபோல் அன்புமணி கூட்டிய நிர்வாக குழு கூட்டத்தில் பாமக செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணிக்கு மட்டுமே உண்டு, தேர்தல் ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி இல்லாமல் நடைபெறும் கூட்டங்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளுக்கும், சட்டத்திற்கும் முரணானது என தீர்மானம் நிறைவேறின. இவ்வாறாக தந்தை, மகன் மோதல் விவகாரம் கட்சியை தாண்டி தேர்தல் ஆணையம் வரை தற்போது நகர்ந்துள்ளது. தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு பணியை துவங்கி விட்டதாகவும், தேர்தலில் பாமகவில் போட்டியிட ஏ-பார்ம், பி-பார்ம் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கே உள்ளதாகவும் ராமதாஸ் கட்சியினருக்கு எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே அன்புமணி டெல்லி சென்று, பாஜ மேலிட தலைவர்களை சந்தித்ததோடு இந்திய தேர்தல் ஆணையத்தையும் சந்தித்து பாமகவுக்கு பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான்தான், புதிய தலைவர் பொதுக்குழுவால் தேர்வாகும்வரை தனக்கே அதிகாரம் என குறிப்பிட்டு மாம்பழம் சின்னத்துக்கான உரிமையை கோரி உள்ளதாக தகவல் வெளியானது.

அன்புமணியின் இத்தகைய செயல்பாடுகளால் கடும் விரக்தியடைந்த ராமதாஸ், அவரது பெயரையே பாமகவினர் யாரும் உச்சரிக்க கூடாது என கண்டிப்புடன் கூறியதோடு கட்சியினருக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். படிப்படியாக அவரை கட்சியிலிருந்து நீக்கும் முடிவுக்கும் ராமதாஸ் செல்வதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதனிடையே பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய பிறகு ராமதாஸ் சார்பில் இந்திய தேர்தல் கமிஷனிடம் ஒரு மனு கொடுத்துள்னர். அதில் பாமகவின் தலைவராக இருக்கும் அன்புமணி சரியாக செயல்படாததால் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்ேடாம். கட்சி நிறுவனரான நானே தற்போது கட்சி தலைவராகவும் தொடர்கிறேன். எனவே எனது தலைமையிலான பாமகவுக்கே கட்சி சின்னத்தை ஒதுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த மாற்றம் சம்பந்தமாக 1413 செயற்குழு உறுப்பினர்கள், 21 தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்த ஆவணங்களையும் அவர் சமர்பித்துள்ளார். ராமதாசின் தனி செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் உள்ள சாமிநாதன்தான் டெல்லியில் ராமதாஸ் சார்பில் தேர்தல் கமிஷனில் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்பு ஒன்றிய அமைச்சராக இருந்த அன்புமணியிடம் தனி செயலராக இருந்ததால் அவர் மூலமாகவே டெல்லியில் காய் நகர்த்தி உள்ளார். இதனால் இந்திய தேர்தல் ஆணையம் யாருடைய மனுவை ஏற்கும், மாம்பழ சின்னம் யாருக்கு செல்லும் என்ற பரபரப்பு பாமகவில் எழுந்துள்ளது. கட்சியின் அங்கீகாரம் தேர்தல் ஆணையத்தால் யாரிடம் செல்கிறதோ அதை வைத்துதான் பாமகவின் எதிர்காலம் குறித்து தெரியவரும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.