Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாமல்லபுரத்தில் கடலில் குளித்தபோது ராட்சத கடல் அலையில் சிக்கி மாயமான 2 மாணவர்கள் உடல் இன்று கரை ஒதுங்கியது

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கடலுக்குள் இறங்கி குளித்தபோது மாயமான 2 கல்லூரி மாணவர்களின் சடலங்கள் இன்று காலை கரை ஒதுங்கியது. போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி கலைக்கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில், பி.காம் 3ம் ஆண்டு படிக்கும் 17 மாணவர்கள், நேற்று 9 பைக்குகளில் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். புராதன சின்னங்கள், கடற்கரை கோயிலை பார்த்தனர். பின்னர் கடற்கரையில் படகில் அமர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் மாலையில் இசிஆர் சாலையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் இறங்கி ஜாலியாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அயனாவரத்தை சேர்ந்த ரோஷன் (19), சூளை பிரகாஷ் (19), சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த கவுதம் (19) ஆகிய மாணவர்கள் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்ததும் சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். முடியவில்லை.

தகவலறிந்து திருப்போரூர் அருகே காலவாக்கம் தீயணைப்பு நிலைய (பொறுப்பு) அலுவலர் ஆனந்தன் தலைமையில் 5 வீரர்கள் மற்றும் மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் படகில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரோஷன் மட்டும் மீட்கப்பட்டார். அவரை மீனவர்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்து பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதனையில், ரோஷன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிரகாஷ், கவுதம் ஆகியோரை தேடும் பணி நள்ளிரவு வரை நடந்தது.

இந்நிலையில், மாமல்லபுரம் அருகே பட்டிப்புலம் கடற்கரையில் இன்று காலையில் 2 இளைஞர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியிருப்பதாக மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று, 2 சடலங்களையும் மீட்டு விசாரித்தனர். அவர்கள் மாயமான மாணவர்கள் பிரகாஷ் (19), கவுதம் (19) என தெரியவந்தது. இதையடுத்து சடலங்களை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.