Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாமல்லபுரம் நுழைவாயில் சிற்பகலை தூண் சுற்றுச்சுவர் சேதம்: சீரமைக்க சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் சாலை நுழைவு பகுதியில் அமைந்துள்ள 45 அடி உயர சிற்பக்கலைத் தூண் சுற்று சுவர் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சேதமடைந்த நிலையில் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கைவிடுக்கின்றனர். தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம்(பூம்புகார்) சார்பில் கைவினைஞர்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில், மாமல்லபுரம், இசிஆர் சாலை நுழைவு வாயிலில் ரூ.60 லட்சம் மதிப்பில் 45 அடி உயரத்தில் அழகிய சிற்பக்கலை தூண் கலைநயமிக்க பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக்கூட்டம் ஆகியவைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டு, மாமல்லபுரத்திற்கு வருகை தரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டது.

மேலும், கடந்த 2022ம் ஆண்டு 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடிய சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி இசிஆர் சாலையையொட்டி உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடந்தது.  முன்னதாக, வீரர் வீராங்கனைகளை வரவேற்கும் வகையில், கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த சிற்பக்கலை தூணை தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) பராமரித்து வந்தது. தற்போது, அந்த சிற்பக்கலைத் தூணை பூம்புகார் நிறுவனம் பராமரிக்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிற்பக்கலைத் தூணின் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட 3 அடி உயர சுற்று சுவரின் ஒரு பகுதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி சேதமடைந்துள்ளது.

இதனிடையே சேதமடைந்த சிற்பக்கலைத் தூணின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தும் பூம்புகார் நிறுவனம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. சிற்பக்கலை நகரமான மாமல்லபுரம் இசிஆர் சாலையின் நுழைவாயில் அமைந்துள்ள சிற்பக்கலைத் தூணின் சுற்றுச்சுவர சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சுற்றுலாப்பயணிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.