மாமல்லபுரம், திருச்செந்தூர், குமரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த தனி ஆணையம்: விரிவான திட்ட அறிக்கைக்கு டெண்டர்
சென்னை: மாமல்லபுரம், திருச்செந்தூர், கன்னியாகுமரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த தனி ஆணையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், “ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கியமான இடங்களான திருவண்ணாமலை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், மாமல்லபுரம், கன்னியாகுமரி, பழனி, நாகூர் வேளாங்கண்ணி பகுதிகளில் சுற்றுலா தேவைகளை பூர்த்தி செய்ய, நவீன தரத்துடன் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.300 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி, மாமல்லபுரம், திருச்செந்தூர், குமரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த தனி ஆணையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்த 3 இடங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தயார் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. சுற்றுலா வசதிகளை மேம்படுத்தவது தொடர்பாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுவத்துவது, கடற்கரைகளை மேம்படுத்துவது, பொழுதுபோக்கு சார்ந்த சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரிவு வாரியாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


