மதுரை: தனியார் டிராவல்ஸ் ஆம்னி பஸ் அலுவலகத்தில் டிரைவரின் கையை கட்டிப் போட்டு விசாரணை நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர், பணியின்போது முறைகேடு செய்ததாக கூறி நேற்று முன்தினம் இரவு அவரது கையை பின்புறமாக கயிறு மூலம் ஜன்னலில் கட்டிப் போட்டு, அலுவலக ஊழியர்களை கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, ‘கை வலிக்கிறது’ என டிரைவர் வலியால் கதறுகிறார். தண்ணீரை மட்டும் கொடுத்து விட்டு, மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அதில், பஸ்சில் கூடுதலாக ஆட்களை ஏற்றி ரூ.4000 வாங்கினீயா? என டிரைவரிடம் கேட்கின்றனர்.
அதற்கு அந்த டிரைவர் ரூ.2,200தான் வாங்குனேன் என்று கூறுகிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிரைவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோவை அந்த அலுவலகத்தில் உள்ள நபர்களே பதிவிட்டு, அதனை அனைத்து ஆம்னி பஸ் ஓட்டுனர்களும் உள்ள வாட்ஸ்அப் குழுமத்தில் ஷேர் செய்து யாரும் இவருக்கு பணி வழங்க கூடாது என்று கூறி உள்ளனர். இதுகுறித்து பஸ் நிறுவன அலுவலகத்தில் கேட்டபோது, அவர்கள் பதில் தர மறுத்து விட்டனர். வீடியோ வைரலான நிலையில் மதுரை மாட்டுத்தாவணி போலீசார், இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தனியார் பஸ் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வேறு சில டிரைவர்களும் முறைகேடு செய்த புகாரில் அடித்து துன்புறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.