தம்புல்லா: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், வங்கதேசம் 114 ரன் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது.ராங்கிரி சர்வதேச அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 191 ரன் குவித்தது. தொடக்க வீராங்கனைகள் திலாரா அக்தர் 33 ரன் (20 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), முர்ஷிதா கதுன் 80 ரன் (59 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.
கேப்டன் நிகர் சுல்தானா 62 ரன் (37 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ருமானா அகமது 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.அடுத்து களமிறங்கிய மலேசியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 77 ரன் மட்டுமே எடுத்து, 114 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியது. எல்சா ஹன்டர் அதிகபட்சமாக 20 ரன் எடுத்தார். மஹிரா 15, ஜூலியா 11 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். முர்ஷிதா கதுன் ஆட்டநாயகி விருது பெற்றார்.