Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கடமலை-மயிலை ஒன்றியத்தில் விளைச்சல் ஜோரு மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2,500க்கு விற்பனை

*கடந்த ஆண்டை விட விலை உயர்வு

வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர், எட்டப்பராஜபுரம், வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, பொன்னன்படுகை, நரியூத்து, மூலக்கடை, தும்மக்குண்டு, கோம்பைத்தொழு உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பயிரைப் பொருத்தவரை வேர்கள் மண்ணில் மேலோட்டமாக இருக்கும். எளிதாக பராமரிக்க முடியும்.

நல்ல மகசூல் மற்றும் விலை கிடைத்து வருகிறது. உணவுப் பயிராகவும், தீவனப் பயிராகவும் இருப்பதால் நல்ல வருமானம் ஈட்ட முடியும். இதனால், விவசாயிகள் மக்காச்சோளத்தை விரும்பி சாகுபடி செய்கின்றனர்.

கடந்த ஆண்டு கோடை முடிந்த பின்னர் அக்டோபர், டிசம்பர் மாதங்களில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை நல்ல மழை கிடைத்ததால் பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன. சில இடங்களில் படைப்புழு தாக்குதல் தென்பட்டது.

இருப்பினும் விவசாயிகள் மருந்து தெளித்து கட்டுப்படுத்தியதால் மகசூல் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது மக்காச்சோளத்தை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அறுவடை செய்யப்பட்ட சோளத்தை சாலையில் கொட்டி உலர்த்தி வருகின்றனர். மக்காச்சோளத்தை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் வரத் தொடங்கியுள்ளனர். இங்கு விளையும் மக்காச்சோளம் தரமாக இருப்பதால் சத்து மாவு தயாரிக்க அனுப்பப்படுகிறது. தற்போது நல்ல விலை கிடைத்து வருவதால், மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குவிண்டாலுக்கு ரூ.2,500

இது குறித்து விவசாயி சங்கிலி கூறுகையில்,`` தற்போது மக்காச் சோளத்தை அறுவடை செய்து உலர்த்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்த சீசனில் சாகுபடி செய்த போது போதிய மழை கிடைத்ததால் மக்காச்சோள பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்துள்ளன.

இதனால் கதிர்கள் அதிக தரத்துடன் காணப்படுகிறது. இதனால் குவிண்டாலுக்கு தரத்தைப் பொருத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.25 வீதம், ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூ.2,500க்கு விற்பனையாகிறது. மேலும், தரத்தின் படி ரூ.2,400, ரூ.2,500 என விலை கிடைக்கிறது. கடந்த சீசனில் குவிண்டாலுக்கு ரூ.2,000 வரை கிடைத்தது. கூடுதல் வருமானம் கிடைப்பதால் மகிழ்ச்சி’’ என்றார்.