Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகாராஷ்டிராவில் 3வது முறையாக முதல்வராக பட்நவிஸ் பதவி ஏற்பு: ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார்-துணை முதல்வர்கள், பிரதமர் மோடி, அமித்ஷா, அம்பானி, பிரபல நடிகர்கள் பங்கேற்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வராக 3வது முறையாக தேவேந்திர பட்நவிஸ் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேயும், அஜித்பவாரும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில், பிரதமர் மோடி, பாஜ மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மகாராஷ்டிராவில் பாஜ, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்றது.

இருப்பினும், முதல்வர் யார் என முடிவு செய்யாததால், புதிய அரசு பதவியேற்கவில்லை. தேர்தல் முடிவு வெளியாகி 12 நாள் இழுபறிக்குப் பிறகு, நேற்று முன்தினம் நடந்த பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அந்த கட்சியின் சட்டமன்ற தலைவராக தேவேந்திர பட்நவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் அஜித்பவார் துணை முதல்வர் பதவிக்கு ஏற்கனவே சம்மதம் தெரிவித்து விட்டார். ஆனால், ஷிண்டேயிடம் நிருபர்கள் இது பற்றி கேட்டபோது, ‘‘காத்திருங்கள், சொல்கிறேன்’’ என்றார்.

இதனால், ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்பாரா என்ற கேள்விக்கான பதில் மர்மமாகவே இருந்தது. ஷிண்டே முதல்வர் பதவிதான் வேண்டும் என நெருக்கடி கொடுத்ததாகவும், அவ்வாறு முதல்வர் பதவி அவருக்குத் தரப்படவில்லை என்றால், தனது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என நிபந்தனை வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை என, ஸ்ரீகாந்த் ஷிண்டே தெளிவுபடுத்தி விட்டார்.

இருப்பினும் நேற்று முன்தினம் இரவு வரை, ஷிண்டே துணை முதல்வராகப் பதவியேற்பாரா என்பதற்கு பதில் கிடைக்கவில்லை. நேற்று காலை பேட்டியளித்த சிவசேனா மூத்த தலைவர் உதய் சாமந்த், ‘‘ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்காவிட்டால், சிவசேனா எம்எல்ஏக்கள் யாரும் அந்தப் பதவியை ஏற்க மாட்டார்கள்’’, என்றார். இதன்பிறகு, சிவசேனா தலைவர்கள் சிலர் ஷிண்டேயை சந்தித்து பேசினர். துணை முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என அவரை வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

பதவியேற்பு விழா மாலை 5.30 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையிலும், மதியம் 3 மணி வரை ஷிண்டே தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. சிவசேனா தலைவர்கள் மற்றும் பாஜ தலைவர்கள் தொடர்ந்து ஷிண்டேயிடம் பேச்சு நடத்தினர். பின்னர், மதியம் 3 மணிக்கு மேல் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா தலைவர் உதய் சாமந்த், ‘‘துணை முதல்வர் பதவியை ஏற்க ஷிண்டே சம்மதம் தெரிவித்து விட்டார் ’’ என்றார்.

முன்னதாக, அரசில் பங்கேற்குமாறு ஷிண்டேவிடம் வலியுறுத்தியதாக பட்நவிஸ் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே, பதவியேற்பு விழா நடக்கும் ஆசாத் மைதானத்துக்கு மாலை சுமார் 4.40 மணியளவில் புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் பதவியேற்பு விழா நடந்தது. இதில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக 3வது முறையாக தேவேந்திர பட்நவிஸ் பதவி ஏற்றார். அதன் பின்னர் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் ஆகியோருக்கும் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்ற பிறகு அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மாலை 5.50 மணிக்கு பதவியேற்பு விழா நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின்கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எச்.டி.குமாரசாமி, ஜோதிராதித்ய சிந்தியா, அஸ்வினி வைஷ்ணவ், பூபேந்திர யாதவ், தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், எஸ் ஜெய்சங்கர், சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மாஞ்சி, ராம்தாஸ் அத்வாலே, பிரதாப்ராவ் ஜாதவ்,

தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா அம்பானி, நோயல் டாடா, திரையுலகப் பிரபலங்கள் ஷாரூக்கான், சல்மான்கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், சஞ்சய் தத், மாதூரி தீட்சித், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலங்கள் முன்பும் கொண்டாட்டங்கள் நடந்தன. தொண்டர்கள் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

* பாஜ, கூட்டணி கட்சிகளின் முதல்வர்கள் பங்கேற்பு

மகாராஷ்டிரா முதல்வர் பதவி ஏற்பு விழாவில் பா.ஜ முதல்வர்கள் யோகி ஆதித்யநாத் (உத்தரப்பிரதேசம்), புஷ்கர் சிங் தாமி (உத்தரகாண்ட்), நயாப் சிங் சைனி (ஹரியானா), பூபேந்திர பட்டேல் (குஜராத்), பிரமோத் சாவந்த் (கோவா), ஹிமந்தா பிஸ்வா சர்மா (அசாம்), விஷ்ணு தியோ சாய் (சட்டீஸ்கர்), பஜன்லால் சர்மா (ராஜஸ்தான்), மோகன் சரண் மாஜி (ஒடிசா), பெமா காண்டு (அருணாச்சல பிரதேசம்), என்.பிரேன் சிங் (மணிப்பூர்) , மாணிக் சாஹா (திரிபுரா) ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

பா.ஜ கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான நிதிஷ் குமார் (பீகார்), கான்ராட் சங்மா (மேகாலயா), நெய்பியு ரியோ (நாகாலாந்து), பிரேம் சிங் தமாங் (சிக்கிம்), என் ரங்கசாமி (புதுச்சேரி) ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் பவன் கல்யாண் (ஆந்திரப் பிரதேசம்) போன்ற பா.ஜ கூட்டணி ஆளும் மாநிலங்களின் துணை முதல்வர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

* சரத்பவார், உத்தவ் தாக்கரே புறக்கணிப்பு

முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் ஆகியோர் புறக்கணித்துவிட்டனர். அதே போல் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

* உள்துறை, நிதித்துறை யாருக்கு?

கடந்த ஆட்சியில் முதல்வர் பதவியை ஷிண்டே வகித்தாலும், உள்துறையை துணை முதல்வராக இருந்த பட்நவிஸ் வைத்துக் கொண்டார். மற்றொரு துணை முதல்வரான தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாருக்கு நிதித்துறை பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த முறை முதல்வர் பதவியை பட்நவிசுக்கு விட்டுக் கொடுத்ததால், தனக்கு உள்துறை வேண்டும் என ஷிண்டே நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.