Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகாகும்பமேளா பலிகள் பற்றி குறிப்பிடவில்லை மோடி பேச்சால் மக்களவையில் அமளி: நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: மகா கும்பமேளா குறித்து பிரதமர் மோடியின் பேச்சால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் பலியானது குறித்தும் பிரதமர் பேச வேண்டுமெனக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை நேற்று கூடியதும், அவைக்கு பிரதமர் மோடி வந்தார். அவருக்கு பாஜ எம்பிக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, சமீபத்தில் உபியின் பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடந்து முடிந்த மகா கும்பமேளா குறித்து பிரதமர் மோடி பேசினார்.

அவர் பேசியதாவது: மகா கும்பமேளாவின் வெற்றி, அரசு மற்றும் சமூகத்தின் எண்ணற்ற மக்களின் பங்களிப்பால் கிடைத்தது. சுமார் ஒன்றரை மாதங்களாக மகா கும்பமேளாவின் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் நாம் கண்டோம். லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் ஒன்றுகூடி, வசதி, சிரமம் பற்றிய பிரச்னைகளைத் தாண்டி வந்த விதம் மிகப்பெரிய பலம். ஒற்றுமையின் அமிர்தம் மகா கும்பமேளாவின் மிகவும் புனிதமான பிரசாதம். பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் சிறப்பு என்று எப்போதும் கூறி வருகிறோம்.

இந்த ஒற்றுமையை தொடர்ந்து வளப்படுத்துவது நமது பொறுப்பு. 1857ல் தொடங்கிய சுதந்திர போராட்டம், பகத்சிங்கின் தியாகம், நேதாஜியின் தில்லி சலோ அைழப்பு, மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் இருந்து உத்வேகம் பெற்று இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதே போன்ற மக்கள் ஒற்றுமை மகா கும்பமேளாவில் காணப்பட்டது. பிரயாக்ராஜ் மகா கும்பமேளா விழித்தெழுந்த தேசத்தின் உணர்வை பிரதிபலிக்கும் குறிப்பிடத்தக்க மைல்கல்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால் மாநில அரசுகளே பலியானோர் குடும்பங்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட நிவாரணங்களை வழங்கும். மகா கும்பமேளாவின் போது நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆனால், நாட்டின் பிரதமர் மகாகும்பமேளா குறித்து மக்களவையில் பேசும்போது, அதுபற்றி வாயே திறக்கவில்லை. பலியானோருக்கு இரங்கலோ, உரிய நிதியுதவி அறிவிப்புகளையோ வெளியிடவில்லை.

இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் இருக்கையில் இருந்து எழுந்து கோஷமிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. பிரதமர் மோடியின் பேச்சில் கூட்ட நெரிசல் பலி விவகாரத்தையும் சேர்க்க வேண்டுமென முழக்கமிட்டனர். இதனால் அவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

* கூடுதல் செலவினத்துக்குரூ.51,463 கோடி ஒப்புதல்

நடப்பு நிதியாண்டில் ரூ.51,463 கோடிக்கான கூடுதல் செலவினத்துக்கு நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியது. இதற்கான துணை மானிய கோரிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். நடப்பு நிதியாண்டில் கூடுதல் செலவினத்துக்கு மொத்தம் ரூ.6.78 லட்சம் கோடி தேவை என ஒன்றிய அரசு கூறி உள்ளது.

இதில், ரூ.6.27 லட்சம் கோடி ஒன்றிய அரசு சேமிப்புகள் மற்றும் வருவாய் மூலம் ஈடு செய்யப்படும். எஞ்சிய ரூ.51,463 கோடிக்கு தற்போது ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இந்த கூடுதல் செலவின தொகையில், உர மானியம், அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்டவைகளுக்கு நிதி ஒதுக்கப்படும். இதே போல, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்திற்கு ரூ.35,104 கோடிக்கான பட்ஜெட்டுக்கும் ஒப்புதல் தரப்பட்டது.