Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மதுரை மண்டல அரசு பஸ்களில் பயண கட்டணம் திடீர் அதிகரிப்பு: பல வழித்தடங்களில் கட்டணம் உயர்ந்தது

கோவில்பட்டி: மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர். அரசு போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலத்தில் தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் கோட்டமும், மதுரை மண்டலத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் கோட்டமும் உள்ளன. இக்கோட்டங்களின் கீழ் பல்வேறு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. தினந்தோறும் மதுரை மண்டல போக்குவரத்து கழகம் மூலம் மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு மண்டேலா நகர், காரியாபட்டி, கல்குறிச்சி, பாளையம்பட்டி அருப்புக்கோட்டை, பந்தல்குடி, மேலக்கரந்தை, முத்துலாபுரம், எட்டயபுரம், கீழ ஈரால், எப்போதும்வென்றான், குறுக்குச்சாலை, தூத்துக்குடி, ஸ்பிக்நகர், பழைய காயல், ஆத்தூர், முக்காணி, ஆறுமுகநேரி, காயல்பட்டினம் என 20க்கும் மேற்பட்ட நிறுத்தங்கள் வழியாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மதுரை மண்டலம் சார்பில் சுமார் 32 அரசு பேருந்துகள், நெல்லை மண்டலம் சார்பில் 60 அரசு பேருந்துகள், கோவை மண்டலம் சார்பில் சுமார் 9 அரசு பேருந்துகள் தூத்துக்குடி மற்றும் அதன் மார்க்கமாக திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல் மறுமார்க்கமாக இதே வழித்தடத்தில் திருச்செந்தூரில் இருந்து மேலக்கரந்தை, அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கும் இயக்கப்படுகிறது. இவ்வழித்தடத்தில் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு ரூ.172 பயணக் கட்டணமும், தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு ரூ.133 பயணக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடியில் இருந்து வடக்கு நோக்கி மதுரைக்கு இடைப்பட்ட நிறுத்தங்களின் பயணக் கட்டணம் அறிவிப்பின்றி உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். திருச்செந்தூரில் இருந்து ஆத்தூருக்கு 20 நாட்களுக்கு முன் பதினேழு ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 20 ரூபாயாகவும், ஆறுமுகநேரியில் இருந்து ஸ்பிக்நகருக்கு ரூ.20ல் இருந்து 25 ஆகவும், ஆத்தூரில் இருந்து ஸ்பிக் நகருக்கு ரூ.15ல் இருந்து 20 ஆகவும், தூத்துக்குடியில் இருந்து எப்போதும்வென்றானுக்கு ரூ.23ல் இருந்து ரூ.30 ஆகவும், தூத்துக்குடியில் இருந்து எட்டயபுரத்துக்கு ரூ.41ல் இருந்து 50 ஆகவும், மேலக்கரந்தையில் இருந்து மண்டேலா நகருக்கு ரூ.61ல் இருந்து 65 ஆகவும், மேலக்கரந்தையில் இருந்து மாட்டுத்தாவணிக்கு ரூ.75ல் இருந்து 80 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

தற்போது மதுரை மண்டலம் முழுவதும் இதுபோன்று பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பராமரிப்பு செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் செலவுகள் இருந்தாலும் மக்களின் சிரமத்தை உணர்ந்து பேருந்து கட்டண உயர்வை அரசு பரிசீலனை செய்து பழைய கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.