மதுரை மாநகராட்சி வரி முறைகேடு கவுன்சிலர்கள், ஊழியர்களிடம் சிறப்புக் குழுவினர் விசாரணை: ஐகோர்ட் கிளையில் இன்று அறிக்கை தாக்கல்
மதுரை: மதுரை மாநகராட்சியில் 2023, 2024ல் வணிக, குடியிருப்பின் 150 கட்டிடங்களுக்கு வரி குறைத்து விதித்து முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக ரூ.150 கோடி வரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரில் 10 பேர் கைது செய்யப்பட்டு, 19 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் தலைமையிலான மத்திய குற்றப்பிரிவினரை கொண்ட சிறப்பு விசாரணை குழுவினர், நேற்று 3வது நாளாக 3 கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி தற்காலிக பணியாளர்கள், கட்டிட உரிமையாளர்களிடம் தொடர் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மாநகராட்சியின் கம்ப்யூட்டர் ஆபரேட்டரான மதுரை சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் உள்ளிட்ட 2 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். இவர்கள் உள்ளிட்ட மேலும் பலரது பட்டியலுடன் விசாரணை தொடர்கிறது. இதுதவிர 3 கவுன்சிலர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்திலும் சிறப்பு விசாரணை குழுநேரில் சென்று குறிப்பிட்ட ஆவணங்களை பெற்றுள்ளது. இவ்வழக்கில் மேலும் சிலர் விரைவில் கைதாவர்’’ என்றார். இன்று ஐகோர்ட் கிளையில் அறிக்கையை தாக்கல் செய்கின்றனர்.