சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு அரசு சுற்றுசூழல் அனுமதி வழங்கியுள்ளது. மதுரை தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ.1977.8 கோடி பட்ஜெட்டில் ஜப்பான் நாட்டு ஜெய்கா நிதிநிறுவனத்துடன், கடந்த 2021ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பீட்டில் 82% சதவீத தொகையான ரூ.1627.70 கோடி, ஜெய்கா நிறுவனம் மூலம் கடனாக பெறப்படும் எனவும், மீதமுள்ள தொகையை ஒன்றிய அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக வேறு எந்த கட்டுமான பணிகளும் நடைபெறவில்லை. இதற்கிடையே, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கு மதுரை அருகே, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் செய்முறை வகுப்பு நடத்த திட்டமிட்டு விடுதி, வகுப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் வாடகை கட்டிடம் பிடிக்கும் பணி நடந்து வருகிறது. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளுக்கான தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டதாக கூறி, எய்ம்ஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் படங்கள் வெளியிடப்பட்டன.
ஆனால் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த சூழலில் கடந்த 2ம் தேதி கட்டுமானம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை, எய்ம்ஸ் நிர்வாகம் தரப்பில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அளிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையை ஆய்வு செய்த வல்லுநர் குழு சுற்றுச்சூழல் துறையிடம் அளித்த ஆய்வறிக்கையில் அடிப்படையில் அனுமதி தரலாம் என்று கடந்த மே 10ம் தேதி பரிந்துரை அளித்தது. மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த நிலையில், தற்போது சுற்றுச்சூழல் அனுமதியைத் தமிழக அரசு வழங்கி உள்ளது.
இருப்பினும், கட்டுமானத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நிபந்தனைகளை மீறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.